ஆதார் கார்டுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் அனைத்தும் செயலிழந்துவிடும் - மத்திய அரசு
ஆதார் கார்டுடன் பான் கார்டினை ஒன்றிணைக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறிவருகிறது. முன்னதாக இந்த நடவடிக்கையை பூர்த்தி செய்ய மத்திய அரசு வழங்கியிருந்த கால அவகாசம் கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதியோடு நிறைவடைந்தது. அதன் பின்னர் சில நிபந்தனைகளோடு காலக்கெடுவானது இந்த வருடம் மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த முறை இணைப்பினை செய்ய தவறியவர்கள் இம்முறை அதற்கான அபராதத்தை செலுத்திய பின்னர், ஆதார் கார்டுடன் பான் கார்டினை இணைத்து கொள்ளலாம். அப்படியில்லாமல் இம்முறையும் இணைக்க தவறினால் ஏப்ரல் 1ம் தேதி முதல் பான் கார்டினை நீங்கள் எதற்காகவும் பயன்படுத்த இயலாது என்ற நிபந்தனையும் எச்சரிக்கையும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அபராதம் செலுத்தி ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைத்தல்
இது குறித்து இந்திய வருமான வரித்துறை தனது ட்விட்டர் பக்கத்தில், வருமான வரி சட்டம் 1961ன் படி, அனைத்து பான் அட்டை வாடிக்கையாளர்களும் இந்தாண்டு மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் அட்டையுடன் இணைந்திருக்க வேண்டும். அப்படியில்லையெனில் 2023ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் ஆதாருடன் இணைக்காத பான் கார்டுகள் அனைத்தும் செயலற்றதாக மாறிவிடும். இது கட்டாயமானது, இன்றே செய்யவும் என்று பதிவு செய்துள்ளார். 2022ம் ஆண்டு மார்ச் மாத இறுதியின் கெடுவை தவறவிட்டு அதே வருடம் ஜூன் 30ம் தேதிக்குள் இணைத்தவர்களிடம் ரூ.500 அபராதம் பெறப்பட்டது. அதன்பின் இணைத்தவர்களுக்கு ரூ.1000 அபராதமாக வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.