"தாயில்லா நிலையை உணர்கிறேன்"; மகன் தவெக வேட்பாளராக மாறிய நிலையில் அதிமுக மூத்த தலைவர் தனபால் உருக்கம்
செய்தி முன்னோட்டம்
அதிமுகவின் மூத்த தூண்களில் ஒருவரான முன்னாள் சபாநாயகர் பி.தனபால், தான் 1972 ஆம் ஆண்டு முதல் இந்த இயக்கத்திற்காக ஆற்றிய பணிகளைத் தனது அறிக்கையில் நினைவு கூர்ந்துள்ளார். எம்ஜிஆர் காலத்திலிருந்தே சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய இவரை, ஜெயலலிதா அவர்கள் அமைச்சராகவும், பின்னர் தமிழகத்தின் மிக நீண்ட காலச் சபாநாயகராகவும் உயர்த்தி அழகு பார்த்தார். இது குறித்து எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அதிக நாட்கள் சபாநாயகராக இருந்த பெருமையை எனக்குத் தாய் (ஜெயலலிதா) வழங்கினார்" என்று குறிப்பிடும்போது அவரது நெஞ்சம் நெகிழ்வதாக தனபால் தெரிவித்துள்ளார்.
யாரும் வந்து பார்க்கவில்லை
யாரும் வந்து பார்க்கவில்லை என உருக்கம்
தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒரு அதிர்ச்சியான தகவலைப் பகிர்ந்துள்ளார் தனபால். கடந்த ஆறு மாத காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தன்னை, அதிமுக தலைமை சார்பிலோ அல்லது முக்கிய நிர்வாகிகளோ நேரில் வந்து பார்க்கவில்லை என்றும், தொலைபேசியில் கூட நலம் விசாரிக்கவில்லை என்றும் வருத்தத்துடன் கூறியுள்ளார். 1988இல் தனக்கு விபத்து ஏற்பட்டபோது ஜெயலலிதா அவர்கள் நேரில் வந்து முதலுதவி செய்ததை நினைவுகூர்ந்த அவர், தற்போது 'தாயில்லாத நிலையை' உணர்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
காரணம்
மகன் லோகேஷ் தனபால் தவெகவில் இணைய இதுதான் காரணம்
அவிநாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடத் தான் வாய்ப்பு கேட்டது உண்மைதான் என்றும், ஆனால் தனக்கோ அல்லது தனது மகனுக்கோ வாய்ப்பு வழங்கப்படாததில் தமக்கு வருத்தம் ஏதுமில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இருப்பினும், உடல்நிலை குன்றியிருந்த நேரத்தில் காட்டிய அலட்சியமே தனது மகன் லோகேஷ் தனபாலை விரக்தியடையச் செய்ததாகக் கூறியுள்ளார். அந்த விரக்தியின் காரணமாகவே லோகேஷ் தனபால் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து, தற்போது ராசிபுரம் தொகுதியின் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற ரகசியத்தை உடைத்துள்ளார்.
அதிமுக
ஆதியும் அந்தமும் அதிமுகதான்: தனபாலின் இறுதி உறுதி
தனது மகன் வேறு கட்சிக்குச் சென்று வேட்பாளராகிவிட்ட போதிலும், பி. தனபால் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். "என்னைப் பொறுத்தவரையில், எனக்கு ஆதியும் அந்தமும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான்" என்று கூறி, தான் இறுதிவரை இரட்டை இலைக்கு விசுவாசியாகவே இருப்பேன் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஒரு மூத்த தலைவரின் இந்த உருக்கமான அறிக்கை, தேர்தல் நேரத்தில் அதிமுக தலைமைக்கு ஒரு தர்மசங்கடமான சூழலை உருவாக்கியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
அறிக்கை! pic.twitter.com/8DZVRhHtKQ
— P Dhanapal (@PDhanapaloffcl) April 3, 2026