
Coldrif இருமல் மருந்து விவகாரம்: ஸ்ரேசன் பார்மா உரிமையாளர் சென்னையில் கைது செய்யப்பட்டார்
செய்தி முன்னோட்டம்
மத்தியப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட 20 குழந்தைகள் மரணத்துக்கு காரணமான Coldrif இருமல் மருந்து விவகாரத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரேசன் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் எஸ். ரங்கநாதன் இன்று சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேச போலீசார் ஒரு குழுவை தமிழகத்துக்கு அனுப்பி, காஞ்சிபுரம் மற்றும் சென்னை பகுதிகளில் தேடுதல் நடத்தியதன் பின்னர், ரங்கநாதன் சென்னை அசோக் நகர் பகுதியில் கைது செய்யப்பட்டதாக News18 செய்தி தெரிவிக்கின்றது. அவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 105, 276 மற்றும் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் 27A பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவகாரம்
பிஞ்சு குழந்தைகளின் மரணத்திற்கு காரணமான 'கோல்ட்ரிஃப்' சிரப்
ரங்கநாதனின் நிறுவனமான ஸ்ரேசன் பார்மாசூட்டிகல்ஸ் தயாரித்த 'கோல்ட்ரிஃப்' என்ற இருமல் சிரப்பின் நுகர்வு, மத்தியப் பிரதேசத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகளின் மரணத்திற்கு காரணமாகக் கூறப்படுகிறது. மருத்துவ ஆய்வுகளில், இந்த சிரப்பில் பின்விளைவுகளாக சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் வகையில் நச்சு இரசாயனங்கள் கலந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மருந்து குடித்த சில மணி நேரங்களுக்குள் குழந்தைகளுக்கு உயிருக்கு ஆபத்தான குறைபாடுகள் தோன்றியதாக கூறப்படுகிறது. மரணம் சம்பவங்களை அடுத்து, சிந்த்வாரா மாவட்ட நிர்வாகம் ஐந்து மருத்துவ கடைகளை மூடி, சிரப்புக்கான மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டு, குழந்தைகளுக்கு இந்த மருந்து வழங்கப்பட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடை
பல மாநிலங்களில் இந்த இருமல் மருந்துக்கு தடை
இதைத்தொடர்ந்து, பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் 'கோல்ட்ரிஃப்' சிரப்பின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட உள்ளன. இந்த சம்பவத்தில் நீதிமன்ற மேற்பார்வையுடன் விசாரணை நடைபெற வேண்டும் எனக்கோரியும், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு குழு அமைக்க வேண்டும் எனவும், வழக்கறிஞர் விஷால் திவாரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் சில தனியார் மருத்துவர்களும் சிரப்பை பரிந்துரைத்ததாகவும், அவர்கள் மீதும் விசாரணை நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.