
பல பிஞ்சு உயிர்களை காவு வாங்கிய Coldrif இருமல் சிரப் தயாரித்த தொழிற்சாலையில் 350-க்கும் மேற்பட்ட விதிமீறல்கள் அம்பலம்
செய்தி முன்னோட்டம்
மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 16 குழந்தைகளின் மரணத்துடன் தொடர்புடைய 'கோல்ட்ரிஃப்' (Coldriff) இருமல் சிரப்பை தயாரித்த ஸ்ரேசன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தில், தமிழக அரசு நடத்திய ஆய்வில் 350-க்கும் மேற்பட்ட கடுமையான விதிமீறல்கள் மற்றும் சுகாதாரமற்ற நடைமுறைகள் அம்பலமாகியுள்ளன. இந்தியா டுடே டிவிக்கு பிரத்தியேகமாகக் கிடைத்த 26 பக்க தமிழ்நாடு அரசு அறிக்கையில், தொழிற்சாலையில் அடிப்படை வசதிகள், தகுதியான ஊழியர்கள் மற்றும் தயாரிப்புப் பாதுகாப்பிற்கான சரியான நடைமுறைகள் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிமீறல்கள்
முக்கிய விதிமீறல்கள் மற்றும் சுகாதாரக் குறைபாடுகள்
இருமல் சிரப் அசுத்தமான சூழ்நிலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. வளாகங்கள் அழுக்காகவும், காற்றோட்டம் குறைவாகவும், உபகரணங்கள் துருப்பிடித்தும் அல்லது சேதமடைந்தும் காணப்பட்டுள்ளன. உற்பத்தியின் தரத்தை உறுதிசெய்ய, Quality Assurance நடைபெறுவது இல்லை. மேலும், தரக் குறைபாடுகளை கையாளவோ அல்லது தயாரிப்புகளைத் திரும்பப் பெறவோ எந்த நிலையான இயக்க நடைமுறைகளும் இல்லை. பூச்சி கட்டுப்பாடு, சுத்திகரிக்கப்பட்ட நீருக்கான அமைப்பு, ஜி.எம்.பி. வடிகால் அல்லது சுத்தம் செய்யும் நடைமுறைகள் எதுவும் நிறுவனத்தில் வழங்கப்படவில்லை.
நச்சு இரசாயனம்
சட்டவிரோத மற்றும் நச்சு இரசாயனங்களின் பயன்பாடு
இந்த நிறுவனம் 50 கிலோகிராம் புரோப்பிலீன் கிளைகோலை முறையான ரசீதுகள் இல்லாமல் வாங்கியது கண்டறியப்பட்டது. சிரப்பில் மிக அதிக நச்சுத்தன்மை வாய்ந்த தொழில்துறை கரைப்பானான டைஎதிலீன் கிளைகோல் (Diethylene Glycol - DEG) தடயங்கள் கண்டறியப்பட்டன. இது பொதுவாக பிரேக் திரவங்கள் மற்றும் பிளாஸ்டிக்குகளில் பயன்படுத்தப்படுவது. ஒப்பீட்டளவில் பாதுகாப்பான புரோப்பிலீன் கிளைகோலுக்குப் பதிலாக, இந்த நச்சுத்தன்மையுள்ள DEG-யை மாற்றுவதுதான் குழந்தைகளிடையே விஷத்தன்மை ஏற்பட்டு மரணங்கள் ஏற்பட உலகளவில் அறியப்பட்ட காரணம் ஆகும். அதிகாரிகள், திரவங்களை மாற்றுவதற்கு பிளாஸ்டிக் குழாய்களைப் பயன்படுத்தியதையும், வடிகட்டுதல் அமைப்பு இல்லாததையும், இரசாயனக் கழிவுகளை நேரடியாகப் பொது வடிகால்களில் செலுத்தியதையும் கண்டுபிடித்தனர்.
நடவடிக்கை
தமிழக அரசின் நடவடிக்கை
சீரற்ற தன்மைகள் மற்றும் குழந்தைகள் மரண சம்பவங்களை தொடர்ந்து, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது. அக்டோபர் 1 முதல் மாநிலம் முழுவதும் 'கோல்ட்ரிஃப்' இருமல் சிரப் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை, ஆலையில் உற்பத்தியை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தொழிற்சாலையில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் கலப்படம் செய்யப்பட்டவை என்று பின்னர் உறுதி செய்யப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தற்போது மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் 'கோல்ட்ரிஃப்' சிரப்பின் விற்பனை மற்றும் பயன்பாட்டை நிறுத்தி வைத்துள்ளன. மத்தியப் பிரதேசத்தில், இந்த மரணங்கள் தொடர்பாக மூன்று அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டு, மாநில மருந்து கட்டுப்பாடு அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.