
பாஜக கூட்டணிக்காக காலில் விழுந்து கெஞ்சிய அன்புமணி மற்றும் சௌமியா; ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு
செய்தி முன்னோட்டம்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது மகனும் கட்சியின் செயல் தலைவருமான அன்புமணி ராமதாஸ் மீது தொடர்ச்சியான கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
மக்களவைத் தேர்தலின் போது அவர் உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவு கட்சியின் நலன்களைப் பாதித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், அன்புமணியும் அவரது மனைவி சௌமியாவும் பாஜகவுடன் கூட்டணிக்கு அழுத்தம் கொடுக்க தனது காலில் விழுது அழுது கெஞ்சியதாகக் கூறினார்.
பாமக அதிமுக கூட்டணியை இயற்கையானது மற்றும் வரலாற்று ரீதியாக வேரூன்றியதாக அவர் வர்ணித்த போதிலும், சௌமியா மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரின் ஆதரவுடன் அன்புமணி ரகசியமாக பாஜக கூட்டணியை ஏற்பாடு செய்ததாக ராமதாஸ் குற்றம் சாட்டினார்.
எடப்பாடி பழனிச்சாமி
கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமி ஒப்புதல்
அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி பாமகவுடன் கூட்டணி வைக்க ஒப்புக்கொண்ட நிலையில், அன்புமணியால் அது நடைபெறாமல் போனதாகக் கூறினார்.
மேலும், அன்புமணி தன்னை மிரட்டியதாகவும், பாஜக கூட்டணி நிராகரிக்கப்பட்டால் அன்புமணிக்கு தான் கொள்ளி வைக்க வேண்டிய நிலை உருவாகும் என உணர்ச்சி ரீதியாக மிரட்டியதாகவும் ராமதாஸ் கூறினார்.
அவர்களின் தீவிர உணர்ச்சிபூர்வமான வேண்டுகோள் தன்னை வேறுவிதமாக செயல்பட முடியாமல் செய்ததாகவும் ராமதாஸ் கூறினார்.
அதிமுக கூட்டணியில் சேர்ந்திருந்தால் பாமகவிற்கு நிச்சயம் மூன்று எம்பி இடங்கள் கிடைத்திருக்கும் என தெரிவித்தார்.
தலைமை
அன்புமணியின் தலைமை மீதும் விமர்சனம்
அன்புமணியின் தலைமையையும் ராமதாஸ் விமர்சித்தார், 35 வயதில் அவரை மத்திய அமைச்சராக்கியதன் மூலம் தான் தவறு செய்துவிட்டதாக ராமதாஸ் கூறியுள்ளார்.
மேலும், அன்புமணி ஒரு முறை தனது தாயாரை பாட்டிலால் அடிக்க முயன்றதாகவும் அவர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
வளர்த்த கிடா நெஞ்சில் பாய்ந்துவிட்டது என வேதனைப்பட்ட ராமதாஸ், தேவைப்பட்டால், கட்சியின் பொதுக்குழு மூலம் அன்புமணியை கட்சியிலிருந்து நீக்கத் தயாராக இருப்பதாகவும் கூறி அதிர வைத்துள்ளார்.
பாமக தலைமையின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பு கட்சி இரண்டாக உடைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.