அசாம்: குழந்தை திருமணம் செய்து கொண்ட 800 பேர் கைது
செய்தி முன்னோட்டம்
அசாமில் குழந்தை திருமணங்களுக்கு எதிரான மாநிலம் தழுவிய இரண்டாம் கட்ட நடவடிக்கையில் 800க்கும் மேற்பட்டோர் இன்று(அக். 3) கைது செய்யப்பட்டதாக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்பட்ட முதல்கட்ட நடவடிக்கையின் போது, மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
"குழந்தை திருமணத்திற்கு எதிரான சிறப்பு நடவடிக்கையில் 800க்கும் மேற்பட்ட குற்றம் சாட்டப்பட்ட நபர்களை அசாம் காவல்துறை கைது செய்துள்ளது" என்று முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா X தளத்தில்(ட்விட்டர்) தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதால் சமூக அச்சுறுத்தல் தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
சஜஸ்க்
குழந்தை திருமணம் செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை அசாமில் மிகவும் அதிகம்
கடந்த 5 ஆண்டுகளில் குழந்தைத் திருமணங்கள் தொடர்பான வழக்குகளில் மொத்தம் 3,907 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் 3,319 பேர் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின்(போக்சோ) கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர் என்றும் கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி, முதல்வர் சர்மா அசாம் சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2019 மற்றும் 2020க்கு இடையில் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-5 (NFHS-5) மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் படி, அசாம் மாநிலத்தில் 20-24 வயதுக்குட்பட்ட 31.8 சதவீதம் பெண்கள், 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டவர்கள் ஆவர்.
இது தேசிய விகிதமான 23.3 சதவீதத்தை விட அதிகமானதாகும்.