குழந்தை திருமணத்தை முறியடிக்கும் முயற்சி: அசாமில் 1800க்கும் மேற்பட்டோர் கைது
அசாமில் குழந்தைத் திருமணத்தை முறியடிக்கும் முயற்சியாக இதுவரை 1,800க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று(பிப் 03) தெரிவித்தார். "சகிப்புத்தன்மை அறவே இல்லாத உணர்வோடு செயல்பட வேண்டும்" என்று அசாம் காவல்துறையை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் முதல்வர் கூறியுள்ளார். "குழந்தை திருமணத் தடைச் சட்டத்தின் விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக மாநிலம் முழுவதும் தற்போது கைது நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 1800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான மன்னிக்க முடியாத மற்றும் கொடூரமான குற்றங்களுக்கு சகிப்புத்தன்மை அறவே இல்லாத உணர்வோடு செயல்பட வேண்டும் என்று அசாம் காவல்துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்." என்று அவர் ஒரு ட்விட்டரில் கூறியுள்ளார்.
அசாம் மாநிலமும் குழந்தை திருமணங்களும்
2019 மற்றும் 2020க்கு இடையில் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-5 (NFHS-5) மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் படி, அசாம் மாநிலத்தில் 20-24 வயதுக்குட்பட்ட 31.8 சதவீதம் பெண்கள், 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டவர்கள் ஆவர். இது தேசிய விகிதமான 23.3 சதவீதத்தை விட அதிகமானதாகும். NFHS-5, கணக்கெடுப்பின் போது, 15-19 வயதுக்குட்பட்ட பெண்களில் 11.7 சதவீதம் பேர் ஏற்கனவே தாய்மார்கள் ஆகி இருந்தனர் அல்லது கர்ப்பமாக இருந்தனர். இது தேசிய எண்ணிக்கையான 6.8 சதவீதத்தை விட அதிகமானதாகும். 14 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு திருமணம் செய்து வைக்கும் குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்திருந்தார். இன்றிலிருந்து இந்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படவுள்ளன.