"மூன்றில் இரண்டு பங்கு 2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டுவிட்டன" -ரிசர்வ் வங்கி ஆளுநர்
செய்தி முன்னோட்டம்
ரிசர்வ் வங்கியானது, கடந்த மே 19-ம் தேதி புழக்கத்திலிருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டது.
அறிவிப்பு வெளியாகி ஒரு மாதத்திற்கு மேல் ஆகியிருக்கும் நிலையில், தற்போது புழக்கத்தில் இருந்த மூன்றில் இரண்டு பங்கு ரூபாய் நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டிருப்பதாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்.
2023, மார்ட் 31 நிலவரப்படி, ரூ,.3.62 லட்சம் கோடி மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுக்கள் இந்தியாவில் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. ரூபாய் திரும்பப் பெறும் அறிவிப்பு வெளியான பிறகு, கடந்த ஜூன் 8-ம் தேதி வரை ரூ.1.8 லட்சம் கோடி மதிப்புடைய ரூபாய் நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார் ரிசர்வ் வங்கி ஆளுநர்.
ரிசர்வ் வங்கி
திரும்பப் பெறப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்கள்:
2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற செப்டம்பர் 30-ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதே ரூ.2.41 லட்சம் கோடி மதிப்புடைய, மூன்றில் இரண்டு பங்கு ரூபாய் நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர்.
மேலும், இந்த ரூபாய் நோட்டு திரும்பப் பெறும் அறிவிப்பானது இந்தியப் பொருளாதாரத்தில் எந்த விதமான எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு மாற்றாக புதிதாக 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால், அதன் பிறகு ஒவ்வொரு நிதியாண்டும் 2000 ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, தற்போது முழுவதுமாக திரும்பப் பெறப்பட்டிருக்கிறது.