'ட்விட்டரின் முன்னாள் CEO ஜாக் டோர்சி கூறுவது அப்பட்டமான பொய்': மத்திய அரசு
அரசாங்கத்தை விமர்சிக்கும் கணக்குகளை முடக்க கோரி இந்திய அரசாங்கங்கம் ட்விட்டரை மிரட்டியதாக ட்விட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்சி கூறி இருந்த குற்றச்சாட்டை இந்திய அரசாங்கம் இன்று(ஜூன் 13) கடுமையாக மறுத்துள்ளது. இதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், "ஜாக் டோர்சி கூறுவது அப்பட்டமான பொய். ட்விட்டரின் வரலாற்றில் சந்தேகத்திற்குரிய ஒரு காலகட்டத்தை மறைப்பதற்கான முயற்சி இது" என்று ட்விட்டரில் விமர்சித்துள்ளார். நேற்று யூடியூப் சேனலான பிரேக்கிங் பாயிண்ட்ஸ் நடத்திய ஒரு நேர்காணலில் ட்விட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்சி கலந்து கொண்டார். அப்போது, ஜாக் டோர்ஸிடம் வெளிநாட்டு அரசாங்கங்களிலிருந்து ஏதேனும் அழுத்தத்தை எதிர்கொண்டீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது.
தவறான தகவல்களை அகற்ற வேண்டிய கட்டாயம் இந்திய அறைக்கு ஏற்பட்டது
அதற்கு பதிலளித்த டோர்ஸி, இந்திய அரசாங்கம் ட்விட்டரை மிரட்டியது என்று கூறினார். இந்நிலையில், இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அமைச்சர் ராஜீவ்-சந்திரசேகர், "டோர்சி ட்விட்டரை நடத்திக்கொண்டிருந்த போது இந்திய சட்டத்தின் இறையாண்மையை ஏற்பதில் ட்விட்டருக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்தியாவின் சட்டங்கள் ட்விட்டருக்கு பொருந்தாது என்பது போல் நடந்து கொண்டனர். இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட நாடாகும். இந்தியாவில் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் இந்தியாவின் சட்டத்தை பின்பற்றுவது அவசியம். 2021 ஜனவரியில் நடந்த போராட்டங்களின் போது, நிறைய தவறான தகவல்களும், இனப்படுகொலை பற்றிய செய்திகளும் கூட வெளியாகின. அவை அனைத்தும் நிச்சயமாக போலியானவை. தவறான தகவல்களை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் அப்போது அரசாங்கம் இருந்தது. அப்படி செய்யவில்லை என்றால் பிரச்சனை மேலும் வலுவடைந்திருக்கும்" என்று கூறியுள்ளார்.