திருச்சியில் வரும் 24ம் தேதி நடக்கவிருக்கும் மாநாடு குறித்து ஓ. பன்னீர் செல்வம் பேட்டி
திருச்சியில் வரும் 24ம் தேதி முப்பெரு விழா மாநாடு நடத்துவதாக ஓ. பன்னீர் செல்வம் முடிவு செய்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று(ஏப்ரல்.,10) மாலை திருச்சி பிரீஸ் ஓட்டலில் நடந்துள்ளது. இதில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், அமைச்சர் வெல்லப்பாண்டி நடராஜன், புகழேந்தி, மருது அழகுராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து ஓபிஎஸ் பேட்டியளித்துள்ளார். அதில் அவர், சட்டப்படி எங்கள் பக்கம் தான் நியாயம் உள்ளது. வரும் 24ம் தேதி எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா பிறந்தநாள், அதிமுக துவங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு விழா என மாபெரும் முப்பெரு விழா மாநாட்டினை நடத்தவுள்ளோம் என்று கூறியுள்ளார்.
எம்ஜிஆர் தொண்டர்களுக்கு அளித்த உரிமைகள் மீட்டெடுக்கப்படும் - ஓபிஎஸ்
தொடர்ந்து பேசிய அவர், அப்போது மக்களை சந்தித்து நாங்கள் தான் உண்மையான அதிமுக என்பதை நிரூபிப்போம். அதிமுக சட்ட விதிகளை சர்வாதிகார கும்பல் அபகரிப்பு செய்வதை அழிக்கும் மாநாடாக இந்த திருச்சி மாநாடு அமையும் என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, எம்ஜிஆர் தொண்டர்களுக்கு அளித்த உரிமைகள் மீட்டெடுக்கப்படும். சட்டப்போராட்டத்தில் உறுதியாக ஒன்றரை கோடி தொண்டர்கள் வெற்றி பெறுவார்கள். எம்ஜிஆர் முதல் ஜெயலலிதா காலம் வரை கட்சியின் வளர்ச்சிக்காக பணியாற்றியவர்கள் அனைவரும் இந்த இயக்கத்தினை நடத்துவோம். கர்நாடக தேர்தலில் போட்டியிட இரட்டை இலை சின்னத்தை கேட்போம் என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.