கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம்: சட்டசபைக்குள் எதிர்க்கட்சியினர் கடும் அமளி
இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தின் கேள்வி நேரத்தில், எதிர்க்கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக எதிர்ப்பை தெரிவித்தனர். அவை தொடங்கியது முதல், அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கள்ளக்குறிச்சி பிரச்சனையை பற்றி விவாதிக்க வேண்டுமென கூறினர். 'சட்டம் ஒழுங்கு மோசம், முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்' என்றும் முழக்கம் எழுப்பினர். தொடர்ந்து ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என எழுதப்பட்ட பதாகையை காண்பித்து சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர். கேள்வி நேரத்திற்கு பிறகு கள்ளக்குறிச்சி தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படும் என சபாநாயகர் கூறியதை ஏற்காமல் தர்ணா போராட்டத்தில் அதிமுகவினர் ஈடுபட்ட நிலையில், எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்று வெளியேற்றினர்.