கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 29ஆக உயர்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் சட்டவிரோதமாக காய்ச்சி விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்ததில் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னதாக கள்ளச்சாராயம் குடித்ததால் பலருக்கும் வாந்தி, வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று காலை முதல் 80க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் அதில் பலர் மரணமடையவே விசாரித்ததில் அவர்கள் கள்ளச்சாராயம் குடித்தது தெரியவந்தது. நேற்று இரவு வரை பலி எண்ணிக்கை 18 ஆக இருந்த நிலையில், இன்று காலை இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது. இதில், பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
விஷ சாராயம் குடித்து பலி
தமிழக அரசு நடவடிக்கை
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர், கள்ளசாராயத்தில் மெத்தனால் கலந்திருப்பதை கண்டறிந்தனர். இதுவே விஷசாரயமாக மாற்றியுள்ளது. இந்த விஷச்சாராயத்தை காய்ச்சி விற்ற குற்றத்திற்காக கோவிந்தராஜ் என்பவரை காவல்துறையினர் செய்துள்ளனர். அவர் இருப்பிலிருந்த மேலும் 200 லிட்டர் விஷ சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில், கள்ளக்குறிச்சி ஆட்சியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அதேபோல கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் இன்று தமிழக முதல்வர் மூத்த அதிகாரிகள் மற்றும் அமைச்சருடன் ஆலோசனை செய்யவுள்ளார். அமைச்சர்கள் முத்துச்சாமி, எ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.