அதானி குழும பிரச்சனை: எதிர்க்கட்சிகளின் பேரணியை தடுத்து நிறுத்தியது காவல்துறை
அதானி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி 18 எதிர்க்கட்சி தலைவர்கள் நடத்திய பேரணி இன்று(மார் 15) பிற்பகல் நாடாளுமன்றத்தில் இருந்து தொடங்கியவுடன் டெல்லி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. அதானி-ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வலியுறுத்தி டெல்லியில் உள்ள அமலாக்க இயக்குனரகத்தின் (ED) அலுவலகத்திற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பேரணியாக செல்ல முயன்றனர். எதிர்க்கட்சி தலைவர்களின் பேரணியை தடுக்க பெரும் படையை நிறுத்திய போலீஸார், அவர்களை விஜய் சவுக் பக்கம் போகவிடாமல் தடுப்புகளை வைத்து தடுத்தனர். மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்த பேரணியில் கலந்துகொள்ள போவதில்லை என்று கூறப்படுகிறது.
நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் காங்கிரஸ்
அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அண்மையில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையில், அதிக கடன் வைத்திருக்கும் நிறுவனம் என்றும் வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க "வரி ஏமாற்று புகலிடங்களை" பயன்படுத்தும் நிறுவனம் என்றும் அதானி குழுமத்தை விமர்சித்திருந்தது. மேலும், பங்குகளை கையாளுதல், கணக்கியல் மோசடி போன்ற குற்றச்சாட்டுகளும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், அதானி நிறுவன பங்குகள் பெரும் வீழ்ச்சியை கண்டது. இதனையடுத்து, பங்குச் சரிவால் எழும் சிக்கல்களை ஆராய 6 பேர் கொண்ட நிபுணர் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், நிபுணர் குழு போதாதது என்றும் நாடாளுமன்ற கூட்டுக் குழு (JPC) மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.