LOADING...
'இது 88 மணி நேர டிரெய்லர்': 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து இந்திய ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை
இந்தியா கடும் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்

'இது 88 மணி நேர டிரெய்லர்': 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து இந்திய ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Nov 17, 2025
02:14 pm

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய இராணுவம் நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' (Operation Sindoor) குறித்த அனுபவப் பாடங்களை இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி நேற்று வெளியிட்டார். எதிர்காலத்தில் பாகிஸ்தான் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால், இந்தியா கடும் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் எச்சரித்தார். புது டெல்லியில் நடந்த 'சாணக்யா பாதுகாப்பு உரையாடல்' (Chanakya Defence Dialogues) நிகழ்வில் பேசியபோது ஜெனரல் திவேதி தெரிவித்த முக்கிய அம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டிரெய்லர்

'ஆபரேஷன் சிந்தூர்' ஒரு டிரெய்லர் மட்டுமே

"ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் டிரெய்லர் மட்டுமே, அது 88 மணி நேரத்தில் முடிந்தது. எதிர்காலத்தில் எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். பாகிஸ்தான் வாய்ப்பளித்தால், அண்டை நாட்டுடன் எப்படிப் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் அதற்குப் பாடம் புகட்டுவோம்," என்று ஜெனரல் திவேதி உறுதியாகத் தெரிவித்தார். "இந்த முறை நாங்கள் 88 மணி நேரம் சண்டையிட்டோம்; அடுத்த முறை அது நான்கு மாதங்களாகவோ அல்லது நான்கு ஆண்டுகளாகவோ கூட இருக்கலாம். அதற்கேற்பப் போரிட போதுமான ஆயுதங்களும், விநியோகங்களும் நம்மிடம் உள்ளனவா? இல்லையென்றால், அதற்காக நாம் தயாராக வேண்டும்," என்றும் அவர் வலியுறுத்தினார்.

பாடங்கள்

இராணுவம் கற்றுக்கொண்ட மூன்று முக்கியப் பாடங்கள்

இந்த நடவடிக்கையில் இருந்து ராணுவம் கற்றுக்கொண்ட மூன்று முக்கியப் பாடங்களை ஜெனரல் திவேதி சுட்டிக்காட்டினார். இன்றைய போர்கள் பல களங்களில் (Multi-Domain) நடைபெறுவதால், இராணுவத்திற்கு இடையே ஒருங்கிணைப்பு அவசியமாகும்; ஒவ்வொரு மட்டத்திலும் உள்ள தளபதிகள் மிகக் குறைந்த நேரத்தில் முடிவுகளை எடுக்கும் திறனை உறுதி செய்வது, நீண்ட காலப் போருக்குத் தேவையான விநியோகங்களையும் ஆயுதங்களையும் உறுதி செய்தல் ஆகியவற்றை இந்தியா ராணுவம் கற்றுக்கொண்ட பாடங்களாக அவர் கூறினார். ஏப்ரல் 22 அன்று நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா ஒரு 'புதிய வழக்கம்' அமைத்துள்ளதாக தளபதி திவேதி குறிப்பிட்டார்.

பதிலடி

"பயங்கரவாதத்திற்குத் தகுந்த பதிலடி"

"ஒரு நாடு பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும்போது, அது இந்தியாவுக்குக் கவலையளிக்கிறது. இந்தியா வளர்ச்சியைப் பற்றிப் பேசுகிறது. எங்கள் பாதையில் யாராவது தடைகளை உருவாக்கினால், நாங்கள் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்," என்று அவர் கூறினார். "பேச்சுவார்த்தையும் பயங்கரவாதமும் ஒருமித்துச் செல்ல முடியாது என்று நாங்கள் கூறியுள்ளோம். அமைதியான செயல்முறையை ஏற்றுக்கொள்ளும்படிதான் நாங்கள் கேட்கிறோம். அதுவரை, நாங்கள் பயங்கரவாதிகளையும், அவர்களை ஊக்குவிப்பவர்களையும் சமமாகவே கருதுவோம்," என்றும் அவர் தெளிவுபடுத்தினார். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.