ஆபரேஷன் அஜய்: 274 இந்தியர்களுடன் இஸ்ரேலில் இருந்து டெல்லி வந்தது நான்காவது விமானம்
போரினால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்பதற்காக தொடங்கப்பட்ட 'ஆபரேஷன் அஜய்' திட்டத்தின் ஒரு பகுதியாக, 274 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு நான்காவது மீட்பு விமானம் இன்று டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானம் இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி இரவு 11.45 மணிக்கு புறப்பட்டது. 'ஆபரேஷன் அஜய்' தொடங்கப்பட்ட பின்னர், இஸ்ரேலில் இருந்து புறப்படும் நான்காவது இந்திய மீட்பு விமானம் இதுவாகும். இதற்கு முந்தைய விமானம்(3வது மீட்பு விமானம்) உள்ளூர் நேரப்படி மாலை 5.40 மணியளவில் புறப்பட்டது. அந்த விமானத்தின் மூலம் 197 இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்வீட்
இஸ்ரேலில் இருந்து புறப்படும் நான்காவது விமானம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்வீட் செய்திருந்தார். "டெல் அவிவில் இருந்து 274 பயணிகளுடன் 4வது விமானம் புறப்படுகிறது" என்று அந்த ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருந்தார். சென்ற வாரம் பாலஸ்தீனிய ஆயுதக் குழுவான ஹமாஸ், இஸ்ரேல் மீது நடத்திய ஏவுகணை தாக்குதலால் போர் மூண்டது. போரால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலில் இருந்து நாடு திரும்ப விரும்பும் இந்தியர்களுக்களின் வசதிக்காக அக்டோபர் 12ஆம் தேதி 'ஆபரேஷன் அஜய்' தொடங்கப்பட்டது. இந்த ஆபரேஷனின் முதல் பகுதியாக, முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், இஸ்ரேலில் இருந்து 212 பேர் விமானம் மூலம் வெள்ளிக்கிழமை டெல்லி அழைத்து வரப்பட்டனர். அதற்கு அடுத்த விமானம் நேற்று காலை இந்தியா வந்தது.