சென்னையில் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு ஆன்லைன் மூலம் உரிமம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலம், சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கு கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் முன்னதாக அறிவுறுத்தியிருந்தார்.
அதற்கேற்ப நேற்று(ஜூன்.,8) சென்னை மேயர் பிரியா ஆன்லைன் மூலம் செல்ல பிராணிகளுக்கு உரிமம் வழங்கும் திட்டத்தினை ரிப்பன் கட்டிடத்தில் துவக்கி வைத்து உரிமங்களையும் வழங்கினார்.
இந்த நிகழ்வில், துணை மேயர், மாநகராட்சி ஆணையர் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மேயர் பிரியா, "செல்ல பிராணிகள் மற்றும் அதன் உரிமையாளர்களின் நலன் கருதியே இந்த ஆன்லைன் மூலம் உரிமம் பெறும் வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
மேயர் பேச்சு
செல்லப்பிராணிகள் வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு நல்ல வாய்ப்பு
தொடர்ந்து பேசிய அவர், "இந்த உரிமம் பெறுவதன் மூலம் அனைத்து செல்ல பிராணிகளுக்கும் ஆண்டுதோறும் வெறிநாய்கடி தடுப்பூசி போடுவதனை உறுதி செய்ய முடியும்.
அதே போல், நோய்வாய்ப்பட்ட மற்றும் வயதான செல்லப்பிராணிகளை தெருவில் விடும் அவலமும் தடுக்கப்படும்" என்று கூறினார்.
மேலும், மண்டல வாரியாக நாய்கள், பூனைகள் ஆகியவற்றின் எண்ணிக்கையினை கணக்கீடு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பதனையும் அவர் தெரிவித்துள்ளார்.
அதே போல் சென்னை மாநகராட்சி மக்கள் இந்த வாய்ப்பினை உபயோகப்படுத்தி கொண்டு மாநகராட்சி இணையதளம் மூலம் ரூ.50 கட்டணம் செலுத்தி தங்கள் செல்லப்பிராணிகளுக்கான உரிமத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு மேயர் பிரியா கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.