தனது பதவியில் இருந்து விலகிய ஒன்பிளஸ் இந்தியாவின் சிஇஓ.. ஏன்?
இந்தியாவில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த நவ்நீத் நாக்ரா, தன்னுடைய பதவியில் இருந்து விலகியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் ஒன்பிளஸ் இந்தியாவின் துணைத் தலைவராகவும், தலைமை மூலோபாய அதிகாரியாகவும் (Chief Strategy Officer) பணியில் இணைந்தார். அதன் பிறகு, 2021-ம் ஆண்டு, அவரை இந்தியாவில் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும், ஒன்பிளஸ் இந்தியா பகுதியின் தலைமையாகவும் அவரை நியமித்தது ஒன்பிளஸ் நிறுவனம். ஒன்பிளஸ் நிறுவனத்துடன் இணைந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் பணியாற்றிய பிறகு தன்னுடைய தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகுவாதக தற்போது அறிவித்திருக்கிறார் நவ்நீத் நாக்ரா.
நன்றி தெரிவித்த ஒன்பிளஸ் இந்தியா!
தன்னுடைய குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடவும், தன்னுடைய லட்சியத்தை நோக்கி பயணிக்கவும் தன்னுடைய பதவியில் இருந்து விலகுவதாக, கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார் நவ்நீத். நவ்நீத் நாக்ரா பதவியில் இருந்து விலகியது குறித்து ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ஒன்பிளஸ் இந்தியாவில் அவருடைய பங்களிப்புக்கு நன்றி தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவில் தங்களுடைய வணிகத்தை மேம்படுத்துவதில் நவ்நீத் நக்ரா முக்கியப் பங்காற்றியிருக்கிறார், என தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது ஒன்பிளஸ் இந்தியா. மேலும், இந்தியாவில் தங்களுடைய சேவையை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்போம், என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால், ஒன்பிளஸ் இந்தியாவின் அடுத்த சிஇஓ யார் என்பது குறித்த தகவல்களை அந்நிறுவனம் பகிரவில்லை.