மணிப்பூர் கலவரம்: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மேலும் இரண்டு பெண்கள்
மணிப்பூர் வன்முறையின் போது ஒரு கும்பல் இரண்டு பெண்களை நிர்வாணமாக வீதியில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு இளம் பெண்கள் கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 21 மற்றும் 24 வயதுடைய இரண்டு பெண்கள் மே 4 ஆம் தேதி இம்பால் கிழக்கு மாவட்டத்தின் கோனுங் மாமாங் பகுதியில் கார் கழுவும் இடத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
பாலியல் பலாத்காரம் செய்யும்படி ஆண்களை ஊக்கப்படுத்திய பெண்கள்
அப்போது, கார் கழுவும் இடத்தில் இருந்த இரண்டு பெண்களையும், ஒரு பெரிய கும்பல் தாக்கியதாக செய்திகள் கூறுகின்றன. இந்த கும்பலில் நிறைய ஆண்களும் சில பெண்களும் இருந்ததாக இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு ஆண் சக ஊழியர், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். அந்த கும்பலில் இருந்த பெண்கள் பாதிக்கப்பட்டவர்களை அறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்யும்படி ஆண்களை ஊக்கப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த அப்பாவி பெண்களை ஒரு அறைக்குள் இழுத்து சென்ற அந்த கும்பல், அவர்களின் வாயில் துணியை வைத்து அடைத்துவிட்டு சுமார் ஒன்றரை மணி நேரம் வெளிச்சம் இல்லாத அறையில் வைத்து அவர்களை கொடுமைப்படுத்தினர்.
பாலியல் வன்கொடுமையை வெளியே சொன்னால் களங்கம் ஏற்பட்டுவிடுமோ
அதன் பிறகு, அந்த பெண்களை தரதரவென வெளியே இழுத்து வந்த அந்த கும்பல், அவர்களை மரத்தூள் ஆலைக்கு அருகில் வீசிவிட்டு சென்றுவிட்டது. அவர்களை வெளியே இழுத்து வரும் போது, அவர்களது ஆடைகள் கிழிந்திருந்தன, தலைமுடி வெட்டப்பட்டிருந்தது, அவர்களின் உடல்கள் இரத்த வெள்ளத்தில் மிதந்தது என்றும் இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்துள்ளார். பாலியல் வன்கொடுமையை வெளியே சொன்னால் களங்கம் ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் ஆரம்பத்தில் தெரிவிக்கப்படவில்லை. எனினும், பாதிக்கப்பட்ட ஒருவரின் தாயார், தைரியத்தை வரவழைத்து கொண்டு மே 16 ஆம் தேதி சைகுல் காவல் நிலையத்தில் ஒரு ஜீரோ FIRரைப் பதிவு செய்தார்.
இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை
அந்த இரு பெண்களும் "பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்" என்று அவர் பதிவு செய்த FIR கூறுகிறது. இந்த FIR, தற்போது, இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள பொரொம்பட் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. "அவர்களின் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை. மேலும் அவர்கள் இருக்கும் இடம் இன்றுவரை தெரியவில்லை," என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இதே காவல்நிலையத்தில் தான், ஏற்கனவே பரபரப்பாக பேசப்பட்டு வரும் இரு பெண்களின் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என போலீஸ் வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.
மே 3ஆம் தேதி தொடங்கிய வன்முறைகள் இன்றுவரை ஓயவில்லை
ஆயுதக் கொள்ளை, தீ வைப்பு, கொலைகள், பெண்கள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பான ஆயிரக்கணக்கான புகார்களை மணிப்பூர் போலீஸார் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். மே 3 ஆம் தேதி தொடங்கிய மணிப்பூர் இனக்கலவரத்தால் இதுவரை குறைந்தது 125 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 40,000 க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். அம்மாநிலத்தில் பெரும்பான்மை இனமான மெய்த்தே சமூகத்தை, பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற பேச்சு ஆரமபித்ததை அடுத்து, பெரும் கலவரங்கள் வெடித்தன. பழங்குடியின சமூகங்களுக்கு கிடைக்கும் சலுகைகள் ஆதிக்க இனத்திற்கு கிடைக்கக்கூடாது என்று 33 பழங்குடியின சமூகங்கள் ஒன்று கூடி மே 3ஆம் தேதி ஒரு பேரணியை நடத்தியது. அப்போது தொடங்கிய வன்முறைகள் இன்றுவரை ஓயவில்லை.