Page Loader
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா; மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க முயற்சி
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா; மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க முயற்சி

எழுதியவர் Sekar Chinnappan
Oct 24, 2024
07:39 pm

செய்தி முன்னோட்டம்

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்ற பிறகு, ஒமர் அப்துல்லா வியாழன் (அக்டோபர் 24) அன்று டெல்லிக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டார். தனது டெல்லி பயணத்தில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க அழைப்பு விடுக்கும் அமைச்சரவை தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடியிடம் சமர்ப்பித்தார். ஒமர் அப்துல்லாவின் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி சமீபத்திய ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் 90 இடங்களில் 42 இடங்களை வென்று வரலாற்று வெற்றியைப் பெற்றது. இது கடந்த ஒரு தசாப்தத்தில் அந்த பிராந்தியத்தில் நடக்கும் முதல் தேர்தல் ஆகும். மேலும், இந்த வெற்றியுடன், அக்டோபர் 16 அன்று முதல்வராக பதவியேற்ற ஒமர் அப்துல்லா, யூனியன் பிரதேசத்தின் முதல் தலைவராக ஆனார்.

மாநில அந்தஸ்து

மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க முயற்சி

முதல்வராக பதவியேற்ற பிறகு, தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தின் போது, ​​ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை ஒமர் அப்துல்லாவின் அரசு ஒருமனதாக நிறைவேற்றியது. பின்னர் இந்தத் தீர்மானம் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவிடமிருந்து முறையான ஒப்புதலைப் பெற்றது. லெப்டினன்ட் கவர்னர் உடனடியாக தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கியதன் மூலம், இதற்கு மத்திய அரசும் ஆதரவாக இருப்பதாகக் கூறப்படுவதால், ஒமர் அப்துல்லா தீர்மானத்தை பிரதமரிடம் வழங்க நேரடியாக டெல்லி கிளம்பினார். இதற்கிடையே, புதனன்று, கந்தர்பாலில் ஏழு உயிர்களைக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ஒமர் அப்துல்லா மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, பாதுகாப்பு கண்காணிப்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.