ஒக்கனேக்கலில் நீர்வரத்து குறைந்தது - சுற்றுலா பயணிகள் அனுமதி குறித்து ஆய்வு
தர்மபுரி மாவட்டம் ஒக்கனேக்கல் பகுதியில் நீர் வரத்து குறைந்துள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதியளிப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. கர்நாடகா மாநிலம் காவிரி ஆற்றிலிருந்து உடனே தண்ணீர் திறந்துவிடும் படி, தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தியது. எனினும் அந்த அரசு தண்ணீர் திறக்காமல் போக்கு காண்பித்தது. இந்நிலையில் கேரளா மாநிலம் வயநாடு மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீரின் அளவு கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து காவிரியாற்றில் இருந்து தமிழகத்திற்கு அண்மையில் தண்ணீர் திறக்கப்பட்டது.
பிலிகுண்டுவில் மதியம் 12 மணி நிலவரப்படி நீரின் வரத்து 12 ஆயிரம் கன அடியாக இருந்துள்ளது
இதன் காரணமாக ஒக்கனேக்கல் அருவிக்கு வரும் நீரின் அளவானது 20,000 கன அடி வரை உயர்ந்தது. நீரின் வரத்து அதிகரித்த காரணத்தினால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனிடையே தற்போது மீண்டும் அப்பகுதியில் நீர் வரத்து குறைய துவங்கியது என்று தெரிகிறது. அதன்படி நீரின் வரத்து மேலும் இன்று(ஜூலை.,30) குறைந்துள்ளதை தொடர்ந்து, கர்நாடக-தமிழகம் எல்லை பகுதியான பிலிகுண்டுவில் மதியம் 12 மணி நிலவரப்படி நீரின் வரத்து 12 ஆயிரம் கன அடியாக இருந்தது என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ஒக்கனேக்கலில் நீரின் வரத்து குறைந்து வருவதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க மீண்டும் அனுமதி வழங்குவது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர் என்று கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.