ஒடிசா: டாடா ஸ்டீல் ஆலையில் நீராவி குழாய் வெடித்து 19 தொழிலாளர்கள் படுகாயம்
ஒடிசாவின் தேன்கனலில் உள்ள டாடா ஸ்டீலின் 300 மெகாவாட் நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் எரிவாயு கசிவு காரணமாக நீராவி குழாய்களில் ஒன்று வெடித்தது. இதனால், இன்று(ஜூன் 13) மதியம் 1 மணியளவில் குறைந்தது 19 ஊழியர்கள் தீக்காயம் அடைந்தனர், அவர்களில் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இன்று நடந்த ஆய்வின் போது, எரிவாயு கசிவு ஏற்பட்டதால் ஒரு நீராவி குழாய் வெடித்தது. அப்போது, வெடி உலையை(blast furnace) ஆய்வு செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் மீது கொதிக்கும் வெந்நீர் விழுந்ததில் அவர்கள் காயமடைந்தனர்.
பாதுகாப்பு தான் எங்களது முன்னுரிமை: டாடா ஸ்டீல்
காயமடைந்தவர்கள் உடனடியாக டாடா ஸ்டீல் ஆலையில் உள்ள தொழில்சார் சுகாதார மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர் என்றும் அதற்கு பிறகு அவர்கள் மேல் சிகிச்சைக்காக கட்டாக்கிற்கு மாற்றப்பட்டனர் என்றும் டாடா ஸ்டீல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. "நாங்கள் தொடர்புடைய அதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். சொந்தமாக உள் விசாரணையும் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு தான் எங்களது முன்னுரிமை. மேலும் இந்த சம்பவத்தில் இருந்து பாடம் கற்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். கூடுதல் விவரங்கள் கிடைத்தவுடன் அறிவிக்கப்படும்," என்று டாடா ஸ்டீல் அந்த அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொண்டு, அவர்களுக்கு உதவி செய்து வருவதாக மேலும் டாடா ஸ்டீல் தெரிவித்திருக்கிறது.