ஏழை பழங்குடியின இளைஞரின் மருத்துவ கனவு - கடந்து வந்த பாதை
ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் மாவட்டத்தில் வசித்து வருபவர் கிரிஷ்ணச்சந்திர அடகா(33). விவசாய குடும்பத்தில் பிறந்த பழங்குடியினத்தினை சேர்ந்த இவரின் தந்தைக்கு வெறும் ஒரு ஏக்கர் நிலம் தான் உள்ளதாம். அடகா'வுடன் சேர்த்து மொத்தம் 5 பிள்ளைகள் கொண்ட இந்த ஏழை குடும்பம் மிக வறுமையில் இருந்துள்ளது. இதற்கிடையே தனது 2006ம் ஆண்டில் 10ம் வகுப்பு தேர்வினை எழுதிய அடகா 58 சதவிகிதம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் நிதியுதவி
ஆனால் அதற்கு மேல் அடகாவின் பெற்றோரால் அவரை படிக்கவைக்க முடியவில்லை என்பதால் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் நிதி உதவி பெற்று இவர் தனது 12ம் வகுப்பினை படித்து முடித்துள்ளார். இந்நிலையில், தனது வாழ்க்கை பயணம் குறித்து அடகா கூறுகையில், "என்னுடன் பிறந்த 3 சகோதரர்கள் தச்சர்களாக பணிபுரிந்தனர். மற்றொரு சகோதரர் மோட்டார் மெக்கானிக் ஆகிவிட்டார்" என்று கூறியுள்ளார்.
பாதியில் படிப்பினை கைவிட்ட அடகா
தொடர்ந்து அவர் பேசுகையில், "பிஎஸ்சி வேதியியல் பாடப்பிரிவில் படித்து கொண்டிருந்த நான், 2008ல் குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பினை பாதியில் நிறுத்திவிட்டு விவசாயம் செய்ய துவங்கினேன். எவ்வளவு கடினமாக உழைத்தாலும் ஒரு நாளைக்கு ரூ.100க்கு மேல் சம்பாதிக்க முடியவில்லை" என்று வருத்தமாக கூறினார். பின்னர் 2012ல் கேரளா சென்ற அவர், புலம்பெயர்ந்த தொழிலாளராக பணியாற்றியுள்ளார். மேலும் பெரும்பாவூரில் செங்கல்சூளையிலும் வேலை செய்துள்ளார். எனினும் சம்பாத்தியம் போதவில்லை என்பதால் கோட்டயத்தில் தீப்பெட்டி தொழிற்சாலையில் சேர்ந்து சிறிது காலம் பணிபுரிந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அடகா
கடந்த 2014ம் ஆண்டு துப்பாடிக்கு திரும்பிய அவர் மீண்டும் விவசாய தொழிலினை கையில் எடுத்துள்ளார். அதன்பின்னர் தொடர்ந்து விவசாய தொழினை செய்துவந்த இவர், கடந்த 2021ம் ஆண்டில் ஓர் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்துள்ளார். மேலும் என்சிஇஆர்டி பாட புத்தகங்களையும் தீவிரமாக படித்த இவர், 2022ம் ஆண்டில் நீட் தேர்வு எழுதியுள்ளார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையிலும் பண தட்டுப்பாடு காரணமாக அவர் அந்தாண்டு நடந்த கவுன்சிலிங் கூட்டத்திற்கு கூட செல்லவில்லையாம்.
அடகா மருத்துவ கனவு நிறைவேற உதவி செய்வதாக உறுதியளித்துள்ள குடும்பத்தினர்
அதனை தொடர்ந்து அவர் மீண்டும் இந்தாண்டு நடந்த நீட் தேர்வில் பங்கேற்று மாநில அளவில் 3,902ம் இடத்தினை பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார். இம்முறையும் தனக்கான வாய்ப்பினை தவறவிட கூடாது என்று எண்ணிய இவர் ஒரு நபரிடம் கடனாக ரூ.37,950 பெற்று ஷாகித் ரெண்டோ மாஜி என்னும் மருத்துவ கல்லூரியில் கட்டணத்தினை செலுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது. அடகாவுக்கு கடன் கொடுத்த நபர் அந்த தொகைக்கு எவ்வித வட்டியும் வேண்டாம் என்று கூறியுள்ளார். அதேபோல் அவரது குடும்பத்தினரும் அவரது மருத்துவ கனவு நிறைவேற உதவி செய்ய தயார் என்று கூறியுள்ளனர் என்பது குறிப்பிடவேண்டியவை ஆகும்.