அலெர்ட் ஆகிக்கோங்க மக்களே; நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் வெளுக்கப்போகுது கனமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக மழை பெய்யும் என்று கணித்துள்ளது. வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதனால் சென்னையில் அக்டோபர் 15ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் இயங்கி வரும் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜானும் வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளார். வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அக்டோபர் 14 முதல் 17 வரை கனமழை
பிரதீப் ஜான் மேலும் கூறுகையில், மேல் வளிமண்டல சுழற்சி வெப்ப நிலையற்ற தன்மையைத் தொடங்கியுள்ளது என்றும், இது வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசத்தை நோக்கி நகர்ந்து, இறுதியில் குறைந்த காற்றழுத்தப் பகுதியாக உருவாகும் என்றும் குறிப்பிட்டார். அவர் மேலும், சென்னை, பாண்டிச்சேரி மற்றும் நெல்லூர் போன்ற பகுதிகளில் மழைப்பொழிவுடன், அக்டோபர் 14 முதல் 17 வரை கனமழை பெய்யும் என்று வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த காலகட்டத்தில் மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்கவும், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மதுரை, சிவகங்கை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.