ஜம்மு காஷ்மீர் காவல் நிலையத்தில் பயங்கர வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழப்பு; 29 பேர் காயம்
செய்தி முன்னோட்டம்
ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள நௌகாம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) நள்ளிரவில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களைச் சோதனை செய்தபோது எதிர்பாராதவிதமாக இந்த விபத்து நடந்ததில், ஒன்பது பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் காவலர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆவர். இதில் மேலும் 29 பேர் காயமடைந்துள்ளனர். இரவு 11:20 மணியளவில், தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய முக்கிய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களைச் சட்டப்பிரிவு மற்றும் தடயவியல் நிபுணர்கள் கொண்ட குழு ஆய்வு செய்து கொண்டிருந்தபோது இந்தச் சக்திவாய்ந்த வெடிவிபத்து நிகழ்ந்தது.
ஃபரிதாபாத்
ஃபரிதாபாத்த்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள்
ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் கைது செய்யப்பட்ட டாக்டர் முஸம்மில் கனாயி என்பவரது வாடகை வீட்டில் இருந்து இந்த அம்மோனியம் நைட்ரேட் அடிப்படையிலான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. இந்த வெடிவிபத்து காரணமாகக் காவல் நிலையக் கட்டிடம் பலத்த சேதமடைந்தது. வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்தன. காயமடைந்தவர்கள் ஸ்ரீநகரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை அதிகாலையில் மீட்கப்பட்ட ஒன்பது சடலங்கள் இன்னும் முறையாக அடையாளம் காணப்படவில்லை.
காவல்துறை
காவல்துறை விளக்கம்
சம்பவ இடத்தின் காணொளிகளில் கடும் தீப்பிழம்புகள், எரிந்த வாகனங்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சன்னல்கள் உடைந்த காட்சிகளும் பதிவாகியுள்ளன. இது தீவிரவாதத் தாக்குதல் அல்ல, மாறாகப் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களைக் கையாளும் போது ஏற்பட்ட விபத்து என்று ஜம்மு காஷ்மீர் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இதற்கிடையே, இந்த விபத்து குறித்த விசாரணையை தேசியப் புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) கையில் எடுத்துள்ளது.