'சிலிண்டர் ரூ.500க்கும், பெட்ரோல் ரூ.75க்கும், டீசல் ரூ.65க்கும் விற்கப்படும்': தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டது திமுக
திமுக கட்சி வரும் மக்களவைத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் முன்னிலையில் திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. மேலும், பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலையும் திமுக வெளியிட்டுள்ளது. மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய திமுக எம்பி கனிமொழி, "திமுகவின் தேர்தல் அறிக்கை எப்போதுமே எங்களுக்கு முக்கியமானது. தேர்தல் அறிக்கைக் குழுவுக்கு என்னைத் தலைமையேற்க அனுமதித்த தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. அனைத்துக் குழு உறுப்பினர்களுக்கும் நன்றி. இந்த தேர்தல் அறிக்கை நமது திராவிட மாடலை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல உதவும்" என்று கூறியுள்ளார்.
தமிழக மக்களுக்கு திமுக வழங்கி இருக்கும் பொது தேர்தல் வாக்குறுதிகள்
குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் பொது சிவில் சட்டம்(யுசிசி) ஆகிய சட்டங்கள் தமிழகத்தில் அமல்படுத்தப்படாது. எரிவாயு சிலிண்டர் ரூ.500க்கும், பெட்ரோல் ரூ.75க்கும், டீசல் ரூ.65க்கும் விற்கப்படும். தேசிய கல்விக் கொள்கை மற்றும் நீட் தேர்வை தமிழகம் அமல்படுத்தாது. கவர்னர் பதவி ஒழிக்கப்படும். மாநில முதல்வருடன் கலந்தாலோசித்த பிறகே, மாநிலத்திற்கான கவர்னரை நியமிக்க வேண்டும். திருக்குறள் 'தேசிய நூலாக' ஆக்கப்படும். நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள 33% இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும். மத்திய அரசு வேலைகளுக்கும் தமிழில் தேர்வு நடத்தப்படும். ரயில்வே துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். இந்தியா திரும்பிய இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். பெண்களுக்கு தொடர்ந்து மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்.