"கவலை தேவையில்லை": கேரளாவில் பரவி வரும் JN.1 வகை தொற்று குறித்து சுகாதார அமைச்சர் பேச்சு
கேரளாவில் தற்போது கண்டறியப்பட்டுள்ள வேகமாக பறக்கக்கூடிய JN.1 வகை கொரோனா குறித்து கவலைப்பட தேவையில்லை என மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இந்தியா SARS-CoV-2 ஜீனோமிக்ஸ் கூட்டமைப்பு (INSACOG), தனது வழக்கமான கண்காணிப்பின் போது JN.1 வகை கொரோனா தொற்றை கண்டறிந்துள்ளதாக நேற்று அறிவித்தது. இது குறித்து பத்திரிக்கையாளர்கள் இடம் பேசிய அமைச்சர் வீணா ஜார்ஜ், இந்த வகை கொரோனா தொற்று சில மாதங்களுக்கு முன்னர், சிங்கப்பூர் விமான நிலையத்தில் இந்திய பயணிகளிடம் கண்டறியப்பட்டதாக தெரிவித்தார். இருப்பினும் மக்கள் எச்சரிக்கையுடனும், இணை நோய் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
கொரோனாவிலிருந்து மீண்ட 79 வயது பெண்
"எந்த கவலையும் தேவையில்லை. இது ஒரு துணை வகை. இது இங்கே கண்டுபிடிக்கப்படுவதற்கு மாதங்களுக்கு முன்பு, சிங்கப்பூர் விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்ட ஒரு சில இந்தியர்களிடம் இந்த வகை தொற்று கண்டறியப்பட்டது. மரபணு வரிசைமுறை மூலம் கேரளா இந்த வகையை அடையாளம் கண்டுள்ளது. கவலைப்படத் தேவையில்லை. நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது," என அவர் கூறினார். இந்த வகை தொற்று இந்தியாவின் வேறு சில பகுதிகளிலும் கண்டறியப்பட்டதை சுட்டிக்காட்டிய அமைச்சர், மாநிலத்தில் வலுவான சுகாதார கட்டமைப்பு இருப்பதாக தெரிவித்தார். இம்மாதம் 8ம் தேதி திருவனந்தபுரத்தில் 79 வயது பெண்ணிடம் இந்த வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது கொரோனாவிலிருந்து மீண்டுள்ளவர், இன்புளுயன்சா போன்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.