தெலுங்கானா மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது: பிரதமர் மோடி காட்டம்
தெலுங்கானாவின் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி(BRS) கட்சி மற்றும் அதன் தலைவர் கே.சந்திரசேகர் ராவ் ஆகியோர், மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களைத் தடுப்பதாகவும், 'பரிவர்வாத்'(குடும்ப ஆட்சி) மற்றும் ஊழலில் ஈடுபடுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப்-8) கடுமையாக சாடினார். ஹைதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தெலுங்கானா மக்களுக்கு பலன் அளிக்கும் பல்வேறு திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை செயல்படுத்துவதற்கு மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என்று கூறியுள்ளார். "மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைக்காதது வேதனை அளிக்கிறது. இது தெலுங்கானா மக்களின் கனவுகளை பாதித்துள்ளது." என்று பிரதமர் கூறி இருக்கிறார். தெலுங்கானா மக்களுக்காகத் திட்டமிடப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகளில் எந்த இடையூறும் ஏற்படக்கூடாது என்று மாநில அரசிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
செகந்திராபாத்-திருப்பதி வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
மேலும், "குடும்ப ஆட்சியையும் ஊழலும் வேறு வேறு அல்ல. குடும்ப ஆட்சி இருக்கும் இடத்தில் ஊழல் வளரத் தொடங்குகிறது." என்று தெலுங்கானா அரசாங்கத்தை பிரதமர் சாடி இருக்கிறார். தெலுங்கானா குடிமக்களின் கனவுகளை நிறைவேற்ற தனது அரசு உறுதிபூண்டுள்ளதாகவும், இந்த ஆண்டு பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து செகந்திராபாத்-திருப்பதி வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்த பிறகு பிரதமர் மோடி இது பற்றி பேசினார். இந்த வந்தே பாரத் ரயில்கள் செகந்திராபாத் மற்றும் திருப்பதிக்கு இடையேயான பயண நேரத்தை கிட்டத்தட்ட மூன்றரை மணிநேரம் குறைக்கும். இதனால் குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்திற்கு செல்லும் யாத்ரீகர்கள் பயனடைவார்கள்.