10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொது தேர்வு தேதிகளில் மாற்றமில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ்
இந்தாண்டுக்கான பொது தேர்வுகளுக்கான தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டன. 12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு, மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி மார்ச் 22-ஆம் தேதி வரையும், 11-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி மார்ச் 24-ஆம் தேதி வரையும், 10-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 26-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே சமீபத்தில் பெய்த கனமழை காரணமாகும், மிக்ஜாம் புயல் காரணமாகவும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அடுத்தாண்டு, மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
தேர்வு தேதிகளில் மாற்றமில்லை
இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்,"தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக பொதுத்தேர்வு தேதி பட்டியல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு தேதிகளை தவிர்த்து தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு தேதிகளை அறிவிக்கும். ஆகையால், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை" என்றார். கூடுதலாக,"அரசுப் பள்ளிகளைப் போலவே, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் ஆசிரியர்கள், நிர்வாகம் சார்ந்த கோரிக்கைகளை எளிய முறையில் தீர்த்து வைக்க, இணையவழி குறைதீர் புலம் உருவாக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்" எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.