பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை: NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்ட (NMMS) தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 23 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய திறமையான பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தகுதி
உதவித்தொகை விவரம் மற்றும் தகுதி
இந்தத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, அவர்கள் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிப்பை முடிக்கும் வரை மாதம் ரூ. 1,000 வீதம், ஆண்டுக்கு மொத்தம் ரூ. 12,000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க மாணவர்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ. 3,50,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், மாணவர்கள் 7 ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SC/ST மாணவர்களுக்கு 50% இருந்தால் போதும்.
விண்ணப்பம்
விண்ணப்பிக்கும் முறை
தகுதியுள்ள மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளிகள் மூலமாகவே இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ. 50 செலுத்த வேண்டும். ஏற்கனவே வழங்கப்பட்ட அவகாசம் முடிவடைந்த நிலையில், பல மாணவர்களின் நலன் கருதி தற்போது டிசம்பர் 23 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ள இந்தத் தேர்வு, மாணவர்களின் உயர் கல்விக்கு மிகப்பெரிய நிதியுதவியாக அமையும் என்பதால், தகுதியுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.