என்.எல்.சி.-கடலூரில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிக நிறுத்தம்
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்தின் 2ம் சுரங்கப்பாதை அமைக்கும் பணியானது சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கரி வெட்டி, மேல் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் நடந்து வருகிறது. இதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருவதால் பல்வேறு தரப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நிலங்கள் கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும், என்.எல்.சி. நிறுவனத்தினர் அப்பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் எனவும் கோரி, இன்று(ஜூலை.,28) முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். மேல் வளையமாதேவி கிராமத்தில் கடந்த 2 நாட்களாக நிலம் கையகப்படுத்தும் பணிகள் காவல்துறை பாதுகாப்புடன் நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
என்.எல்.சி. நிறுவனத்தின் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் போராட்டம்
இந்நிலையில், இன்று பாமக போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டதன் காரணமாக, நெய்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இதனால், கால்வாய் அமைக்கும் பணிக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வாய்ப்புகள் ஏதும் இல்லை என்று கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து இந்த பணியானது இன்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. இதனிடையே, நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்தின், ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர், கடந்த 26ம் தேதி இரவு 10 மணிமுதல் பணி நிரந்தரம் போன்ற 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்நிறுவனம் தங்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.