தேசிய ஜனநாயக கூட்டணியின் பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவியேற்பு
இன்று ஒன்பதாவது முறையாக நிதிஷ் குமார் பீகார் முதல்வராக பதவியேற்றார். நிதிஷுடன், ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள் விஜய் குமார் சவுத்ரி, பிஜேந்திர பிரசாத் யாதவ், ஷ்ரவோன் குமார் ஆகியோரும் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். பாஜக தலைவர்களான சாம்ராட் சவுத்ரி, டாக்டர் பிரேம் குமார், விஜய் சின்ஹா, ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) தலைவர் டாக்டர் சந்தோஷ் குமார் சுமன் மற்றும் சுயேச்சை எம்எல்ஏ சுமித் குமார் சிங் ஆகியோரும் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். பீகார் மாநிலத்தின் துணை முதல்வராக சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹா ஆகியோர் பதவியேற்க வாய்ப்பு உள்ளது .
காலையில் ராஜினாமா மாலையில் மீண்டும் பதவியேற்பு
இன்று காலை நடைபெற்ற ஐக்கிய ஜனதா தள சட்டமன்ற கூட்டத்தில் நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதன் பிறகு, ராஜ்பவனில் வைத்து ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் ராஜினாமா கடிதம் அளித்ததையடுத்து, பீகார் முதல்வர் பதவியை நிதீஷ்குமார் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், பீகாரில் மகாகத்பந்தன்(காங்கிரஸ் கூட்டணியான 'இண்டியா') கூட்டணியை கலைக்குமாறு ஆளுநரிடம் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார். அதன் பிறகு, அவர் பாஜக கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து மீண்டும் பீகாரில் ஆட்சி அமைத்துள்ளார்.