LOADING...
பாஜக தேசிய செயல் தலைவராக 45 வயதே ஆன பீகார் அமைச்சர் நியமனம்; யார் இந்த  நிதின் நபின்?
பாஜக தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நியமனம்

பாஜக தேசிய செயல் தலைவராக 45 வயதே ஆன பீகார் அமைச்சர் நியமனம்; யார் இந்த  நிதின் நபின்?

எழுதியவர் Sekar Chinnappan
Dec 14, 2025
07:08 pm

செய்தி முன்னோட்டம்

பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) உயர்மட்டத் தலைமைப் பொறுப்பில் ஒரு முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. பீகார் மாநில அமைச்சரும், மூத்தத் தலைவருமான நிதின் நபின் அவர்களைக் கட்சியின் தேசிய செயல் தலைவராக பாஜகவின் நாடாளுமன்றக் குழு நியமித்துள்ளது. இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நிதின் நபின் தனது 40களின் நடுப்பகுதியில் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளதால், கட்சியின் தேசியத் தலைமைக் கட்டமைப்பில் இளைய தலைமுறைக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவமாகக் கருதப்படுகிறது. முழு விவரம் இங்கே:-

புதிய தலைமை

புதிய தலைமையின் பின்னணி: ஜேபி நட்டாவுக்குப் பின் மாற்றம்

முன்னதாக, ஜேபி நட்டா ஜனவரி 2020 முதல் தேசியத் தலைவராகப் பதவி வகித்து வந்தார். 2024 மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட முக்கியமான அரசியல் இலக்குகளைக் கருத்தில் கொண்டு அவருக்குப் பலமுறைப் பதவி நீட்டிப்புகள் வழங்கப்பட்டன. தற்போது, கட்சியின் தலைமை அமைப்பைக் கட்டமைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தப் புதிய நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஜேபி நட்டாவிற்கு பதிலாக விரைவில் தலைவராகவும் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதின் நவீனின் நியமனம், கட்சியில் நீண்ட அமைப்பு ரீதியான அனுபவம் கொண்ட ஒரு இளம் தலைவருக்கு முக்கியத்துவம் அளிக்கும் முடிவாகப் பார்க்கப்படுகிறது.

பின்னணி

நிதின் நவீன்: களப்பணியில் சிறந்த தலைவர்

தேசிய அரசியலில் உயர்வு பெற்றுள்ள நிதின் நவீன், பீகார் மாநில அரசியலில் ஆழமான வேர்களைக் கொண்டவர். அவர் தற்போது நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் அரசாங்கத்தில் சாலை கட்டுமானத் துறை அமைச்சராகப் பணியாற்றுகிறார். பாட்னா மாவட்டத்தின் பாங்கிப்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இவர் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். குறிப்பாக, சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பாங்கிப்பூர் தொகுதியில் தனது அருகாமையில் இருந்த போட்டியாளரை 51,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துச் சாதனைப் படைத்தார். அவர் தனது அரசியல் பயணத்தை மாணவர் பிரிவான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் மூலம் தொடங்கினார். மேலும், கட்சியின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் தேசிய பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்படச் செயல்பட்டுள்ளார்.

Advertisement

பாராட்டு

பிரதமர் மோடியின் பாராட்டு

நிதின் நபினுக்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, அவர் கடினமாக உழைக்கும் ஒரு கார்யகர்தா (தொண்டர்) என்றும், அவருக்குப் பணிகளில் சிறந்த அமைப்பு அனுபவம் இருப்பதாகவும் பாராட்டியுள்ளார். "அவர் ஒரு இளம் மற்றும் உழைப்பு மிகுந்தத் தலைவர், மாநில சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சராகப் பீகாரில் சிறப்பாகச் செயல்பட்ட அனுபவம் கொண்டவர். மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக அவர் அயராது உழைத்துள்ளார். அவரது பணிவு மற்றும் களத்தில் நின்று பணியாற்றும் பாணியால் அறியப்பட்டவர். வரவிருக்கும் காலங்களில் அவரது ஆற்றலும் அர்ப்பணிப்பும் நமது கட்சியை வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்." என்று பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement