மதுரை ஆதீன மடத்திற்கு உரிமை கோரும் நித்தியானந்தா - மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
2,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த மதுரை ஆதீன மடத்தின் 293வது தற்போது ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் உள்ளார். இவருக்கு முன்னர் அருணகிரி நாதர் தான் 292வது ஆதீனமாக இருந்தார். அவர் கடந்த 2012ம் ஆண்டு நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக நியமனம் செய்திருந்தார். நித்தியானந்தாவின் இந்த நியமனம் பெரும் சர்ச்சையினை எழுப்பிய நிலையில், அது திரும்ப பெறப்பட்டது. இந்த நியமனம் குறித்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதனிடையே, 2021ம் ஆண்டு அருணகிரி நாதர் இறந்ததையடுத்து தற்போதைய ஆதீனம் தன்னை இந்த வழக்கில் அருணகிரி நாதருக்கு பதிலாக சேர்த்து தொடர்ந்து வழக்கினை விசாரிக்க வேண்டும் என்று அண்மையில் மனுதாக்கல் செய்துள்ளார் என்று தெரிகிறது.
தற்போதைய மதுரை ஆதீனம் மற்றும் அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவு
இந்த மனுவினை மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில், நித்தியானந்தா தற்போது உயர்நீதிமன்றம் மதுரை கிளையில், 'நான் தான் மதுரை ஆதீன மடாதிபதி. அருணகிரி நாதர் உயிருடன் இருக்கையில் என்னை தான் இளைய ஆதீனமாக நியமனம் செய்திருந்தார்' என்றும், 'இந்த நியமனம் குறித்த மனுவினை அப்போதைய மதுரை மாவட்ட நீதிபதியும் ஏற்றுக்கொண்டார்' என்றும், 'இதனால் இந்த மனுவினை மறு சீராய்வு செய்ய வேண்டும்' என்று மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த முரளிசங்கர், இந்த மனு குறித்து தற்போதைய மதுரை ஆதீனம் மற்றும் அறநிலையத்துறை தரப்பில் பதிலளிக்க கூறி வழக்கினை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.