ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள செவிலியரின் வழக்கில் அடுத்த நடவடிக்கை என்ன?
செய்தி முன்னோட்டம்
ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவை விடுவிக்க "எல்லா உதவிகளையும்" வழங்குவதாக வெளியுறவு அமைச்சகம் (MEA) செவ்வாயன்று கூறியது.
திங்களன்று, ஏமன் ஜனாதிபதி ரஷாத் அல்-அலிமி, கடந்த 2017இல் ஏமன் பிரஜையான தலால் அப்தோ மெஹ்தியைக் கொன்றதாகக் கூறப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிமிஷா ப்ரியாவின் மரண தண்டனையை உறுதிப்படுத்தினார்.
இந்த கொலைக்கு பின்னர் நிமிஷா பிரியா ஏமன் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கைது செய்யப்பட்டு 2020இல் மரண தண்டனை விதிக்கப்பட்டார். அவரது மேல்முறையீடு நவம்பர் 2023 இல் ஏமனின் உச்ச நீதி மன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
MEA செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், இந்த விஷயத்தில் அரசாங்கம் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குகிறது என்று கூறினார்.
வாய்ப்பு
நிமிஷா பிரியாவின் விடுதலைக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு
ஷரியா சட்டத்தின்படி, குற்றம் சுமத்தப்பட்டவர், பாதிக்கப்பட்டவர் அல்லது அவர்களது குடும்பத்தினருக்கு பண இழப்பீட்டாக பணம் தந்து, குற்றவாளியை மன்னிக்க கோரலாம்.
இதனை 'ரத்தப் பணம்' அல்லது 'திய்யா' என குறிக்கிறார்கள். அதன் பின்னர் அவர்கள் குடும்பத்தினர் குற்றம் செய்த நபருக்கு மன்னிப்பு வழங்குவது, அவர்களின் விடுதலையைப் பெறுவது குறித்து ஆலோசிக்கலாம்.
நவம்பர் 2023 இல், நிமிஷா பிரியாவின் சார்பாக பேச்சுவார்த்தை தொடங்க $40,000 செலுத்தப்பட்டது. மரண தண்டனையை ரத்து செய்ய அவரது குடும்பம் $400,000 அதிகமாக செலுத்த வேண்டியிருக்கும் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
போராட்டம்
குடும்பத்தினரின் தொடர் போராட்டம்
இந்த வழக்கில் நிமிஷா கைதானதும், கடந்த 2020 ஆம் ஆண்டில், 'சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்' உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பின் மூலம் அவர்கள் தற்போது அவரை விடுவிக்க தேவையான நிதியைத் திரட்ட முயற்சித்து வருகின்றனர்.
மறுபுறம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிரியாவின் தாயார் பிரேமா குமாரி சார்பில் ஆஜரான உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் கே.ஆர், இந்த விவகாரத்தில் இந்திய அரசின் தலையீடு மரண தண்டனையை நிறைவேற்றுவதை தாமதப்படுத்தவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வரவும் உதவும் என்றார்.
குற்றம்
நிமிஷா செய்த குற்றம் என்ன?
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த நிமிஷா பிரியா, 2008இல் ஏமனுக்கு குடிபெயர்ந்தார். அவர் சொந்தமாக கிளினிக் திறக்க விரும்பினர்.
ஆனால் ஏமன் சட்டப்படி அதற்கு உள்ளூர் துணை தேவை. தலால் அப்தோ மஹ்தி, நிமிஷா பிரியா பணிபுரிந்த கிளினிக்கிற்கு அடிக்கடி வருபவர்.
அதனால் இந்த விஷயத்தில் அவரிடம் உதவி கேட்டார்.
2014இல் தொடங்கிய உள்நாட்டுப் போர் காரணமாக ஏமனில் நிமிஷா மட்டும் இருக்க, கேரளாவில் அவரது கணவரும், மகளும் தங்கிவிட்டனர்.
இந்த நிலையில், க்ளினிக் திறக்க நிமிஷாவை தனது மனைவி என காட்டும் போலி ஆவணங்களைத் தயாரித்து, உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்ததாக ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.
அதோடு க்ளினிக்கின் லாபத்திலும் பங்கு தராததால், அவரை நிமிஷா கொலை செய்ததாக கூறப்படுகிறது.