சென்னை, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் என்ஐஏ ரெய்டு
2022ஆம் ஆண்டு கோவையில் பதிவாகிய கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்னை, கோவை, நெல்லை உட்பட 8 மாவட்டங்களில் உள்ள 25க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி கோவையை அடுத்த உக்கடத்தில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் கார் குண்டு வெடித்தது. அந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட ஜமேஷா முபீன் என்பவர் பலியாகினார். அதன் பிறகு, அவர் ஐஎஸ் பயங்கரவாத கூட்டத்தின் ஆதரவாளர் என்பதும், அவர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து மக்கள் கூடும் இடங்களில் வெடிகுண்டு வைக்க திட்டம் தீட்டி இருந்தார் என்பது தெரியவந்தது.
கோவையில்12 இடங்களில் சோதனை
அதனை தொடர்ந்து, இந்த கூட்டத்துடன் தொடர்புடைய உமர் பாரூக், ஷேக் ஹிதயதுல்லா, பெரோஸ், இஸ்மாயில், சனோபர் அலி உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இது போன்ற பயங்கரவாத செயல்களுக்கு நிதி வழங்குவோர் குறித்த ரகசிய தகவல் என்ஐஏ அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. அதனால், என்ஐஏ அதிகாரிகள், சென்னை, கோவை, நெல்லை உட்பட 8 மாவட்டங்களில் உள்ள 25க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். கோவையில், உக்கடம் அல் அமீன் காலனி உட்பட 12 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. உக்கடத்தில் வசித்து வரும் ஏசி மெக்கானிக் அபிபுல் ரகுமான் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.