FASTag மூலம் ஒரே நாளில் ரூ.200 கோடி வசூலைப் பதிவு செய்தது NHAI
கடந்த மாதம் பாஸ்டேக் (FASTag) மூலம் அதிக அளவிலான வருவாயைப் பதிவு செய்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI). மேலும், கடந்த மாதம் ஏப்ரல் 29-ம் தேதி ஒரே நாளில் பாஸ்டேக் மூலம் 1.16 கோடி பரிவத்தனைகளின் மூலம், ரூ.193.15 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது NHAI. பாஸ்டேக் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து அதன் மூலம் ஒரே நாளில் நடைபெற்ற அதிகபட்ச பரிவர்த்தையும், ஒரே நாளில் வசூலிக்கப்பட்ட அதிகபட்ச தொகையும் இது தான். 2021, பிப்ரவரி 15-ம் தேதி இந்தியாவில் பாஸ்டேக் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது நாட்டின் 1,228 டோல் பிளாஸாக்களில் பாஸ்டேக் கட்டண முறையைப் பயன்படுத்தும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
பாஸ்டேக் மற்றும் GNSS:
பாஸ்டேக் என்பது Radio Frequency Identification முறையில் இயங்கும் ஒரு டிஜிட்டல் டோல் கட்டண முறையாகும். இந்த முறையைப் பயன்படுத்துவதன் மூலம், பயனர்கள் டோல் பிளாஸாக்களில் நீண்ட நேரம் வரிசையில் நிற்கத் தேவையில்லை. வாகனத்தில் ஒட்டப்பட்டிருக்கும் பாஸ்டேக் ஸ்டிக்கர்களை ஸ்கேன் செய்து நமது பாஸ்டேக் கணக்கில் இருந்து டோலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுவிடும். மேலும், சில வணிக நிறுவனங்களில் கார் பார்க்கிங் கட்டணங்களைக் கூட பாஸ்டேகைப் பயன்படுத்தி செலுத்த முடியும். பாஸ்டேகைத் தொடர்ந்து தற்போது GNSS அடிப்படையிலான டோல் கட்டண முறையை அமல்படுத்த திட்டமிட்டு வருகிறது மத்திய அரசு. இதன் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் ஸ்கேனர்கள் பொருத்தப்பட்டு நாம் அந்த நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் தூரத்திற்கு மட்டும் கட்டணம் செலுத்து வகையில் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.