ஜிப்மர் மருத்துவமனை பெண் ஊழியர் கொலை வழக்கில் புதிய திருப்பம் - க்ரைம் ஸ்டோரி
இந்த வார Newsbytes.,ன் க்ரைம் ஸ்டோரி: புதுச்சேரி மாநிலம் வில்லியனூரை அடுத்த அரியூர்பேட்டை பகுதியில் மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகம், இவரது மனைவி கோவிந்தம்மாள்(40). கோவிந்தம்மாள் ஜிப்மர் மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3ம் தேதி அரியூரில் நடந்து சென்று சென்ற இவரை மர்மநபர்கள் சிலர் இரும்பு ராடால் தலையில் அடித்து படுகொலை செய்தனர். இதுகுறித்து அப்பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, கள்ளக்காதல் விவகாரமாக இருக்கக்கூடும் என்று சந்தேகித்த காவல்துறை அப்பகுதியில் இருந்த வாலிபர் ஒருவரை விசாரணை செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
மோப்ப நாய் கொண்டு ஆய்வு
தொடர்ந்து, மோப்ப நாய் கொண்டு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தியதில் கோவிந்தம்மாளை தாக்கிய இரும்புக்கம்பி கண்டறியப்பட்டது. அந்த கம்பி எங்கு தயாரிக்கப்பட்டது என்று காவல்துறையினர் ஆய்வு செய்ததில் திருபுவனையில் உள்ள பிரபல இரும்பு கம்பெனியில் தயாரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. அதனையடுத்து அந்த நிறுவனத்தில் பணிபுரிவோர் குறித்து மேற்கொண்ட விசாரணையில் கோவிந்தம்மாளின் பக்கத்துவீட்டில் வசிக்கும் பஞ்சமூர்த்தி(33) அங்கு பணிபுரிகிறார் என்று தெரியவந்துள்ளது. இதனால் அவரை கைது செய்த காவல்துறை விசாரணை செய்துள்ளனர்.
கொலை செய்ததை ஒப்புக்கொண்ட குற்றவாளி
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் கோவிந்தம்மாளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறை அவரிடம் விரிவான விசாரணை நடத்தியுள்ளார்கள். அப்போது, பஞ்சமூர்த்திக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில் அவரது மனைவி கர்ப்பமாக உள்ளார். சில தினங்களுக்கு முன்னர் கோவிந்தம்மாள் மீன் கழுவிய நீரை பஞ்சமூர்த்தி வீட்டின் வாசலில் ஊற்றியுள்ளார்.
மனைவிக்கு சாபம் விட்டதால் ஆத்திரம்
இதனால் இவர்களுக்குள் வாக்குவாதம் வந்துள்ளது. அப்போது உன் மனைவியின் கர்ப்பம் கலைந்துவிடும் என்று கோவிந்தம்மாள் சாபம் விட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர்மீது ஆத்திரம் கொண்ட பஞ்சமூர்த்தி தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்து இரும்பு கம்பியினை எடுத்து வந்துள்ளார். அந்த கம்பியினை அவர் வீட்டுக்கு செல்லும் வழியில் மறைத்து வைத்துள்ளார். அதன் பின்னர் சம்பவ தினத்தன்று கோவிந்தம்மாள் பணியினை முடித்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்துள்ளார். அப்போது பஞ்சமூர்த்தி தான் மறைத்து வைத்திருந்த இரும்புக்கம்பியினை எடுத்து கோவிந்தம்மாளின் தோள்பட்டையில் அடித்துள்ளார்.
சரமாரியாக தாக்கி கொலை செய்த இளைஞர் சிறையில் அடைப்பு
அப்போது வலியில் கோவிந்தம்மாள் கூச்சலிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் பஞ்சமூர்த்தி கோவிந்தம்மாளை மீண்டும் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் கோவிந்தம்மாள் நிலை குலைந்து தடுமாறி கீழே விழுந்தவுடன் அவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய பஞ்சமூர்த்தி, கொலை செய்ய பயன்படுத்திய இரும்பு கம்பியினை அங்கிருந்த மரத்தின் மேல் மறைத்து வைத்துவிட்டு ஒன்றும் அறியாதது போல் இரவு பணிக்கு சென்றுள்ளார். மறுநாள் காலையில் வீடு திரும்பிய அவர், நடந்த கொலைக்கும் அவருக்கும் சம்மந்தம் ஏதும் இல்லாதது போல் இயல்பாக இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. தற்போது பஞ்சமூர்த்தியின் வாக்குமூலத்தினை பெற்ற காவல்துறை அவரை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.