மத்திய வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு; வானிலை அறிக்கை
மத்திய வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியது பின்வருமாறு:- வடமேற்கு மற்றும் மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மத்திய மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மையம் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்திற்கு கிழக்கே சுமார் 310கிமீ தொலைவிலும், ஒடிசாவில் கோபால்பூருக்கு கிழக்கே, தென்கிழக்கே சுமார் 290கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
ஒடிசா நோக்கி நகர வாய்ப்பு
இந்த காற்றழுத்த தாழ்வு மையம் ஒடிசாவில் பாரதீப்புக்கு தெற்கு, தென்கிழக்கே சுமார் 290கிமீ தொலைவிலும், மேற்கு வங்கத்தின் திகாவிலிருந்து தெற்கே 410கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது கொஞ்சம் கொஞ்சமாக வடமேற்கு திசையில் ஒடிசாவின் வடக்கு மற்றும் மேற்கு வங்க கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. பின்னர், அங்கிருந்து ஒடிசாவின் வடக்கு பகுதி மற்றும் மேற்கு வங்காளத்தின் மேற்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, புயல் எச்சரிக்கையை அடுத்து தமிழகத்தின் பல்வேறு துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.