ஓய்வூதியத் திட்டத்தில் புதிய திரும்பப்பெறும் விதிமுறைகளை அமல்படுத்தியிருக்கிறது PFRDA
சமீப காலங்களில் அரசு வழங்கி வரும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) முதலீடு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இந்தத் திட்டத்தை ஓய்வூதியத் திட்டமாக மட்டுமல்லாமல் முதலீட்டுத் தேர்வாகவும் மக்கள் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதில் NPS அடுக்கு-1 மற்றும் NPS அடுக்கு-2 என இரண்டு திட்டங்கள் தற்போது பயன்பாட்டில் இருக்கின்றன. NPS அடுக்கு-1 திட்டத்தின் கீழ், நமது ஓய்வுக் காலத்திற்குப் பிறகு 60% தொகையை வரிவிலக்குடன் நாம் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால்,NPS அடுக்கு-2 திட்டத்தின் கீழ் பயனாளர்கள் வரிவிலக்கு பெற முடியாது. இந்த NPS திட்டங்களில் இருந்து வெளியேறுவதும், ஓய்வூதியம் பெறுவதற்கான வருடாந்திர திட்டத்தை தேர்வு செய்வதும் மிகவும் சிக்கலான செயல்முறையாக இருந்து வந்தது. தற்போது அதனை எளிமையாக்க சில மாற்றங்களைக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.
புதிய திரும்பப்பெறும் விதிமுறைகள்:
புதிய விதிமுறைகளின் கீழ், அனைத்து சந்தாதாரர்களும் NPS திட்டத்திலிருந்து வெளியேறுவதற்கும், வருடாந்திர திட்டத்தை தேர்வு செய்வதற்குமான பொதுவான முன்மொழிவுப் படிவத்தைப் பூர்த்தி செய்யவேண்டும். அனைத்து பயனாளர்களுமே திரும்பப்பெறும் படிவத்தையும், நம்முடைய KYC ஆவணங்களையும் இணையதளத்தில் அப்லேடு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வெளியேறும் நடைமுறையும், வருடாந்திர திட்டத்தை தேர்ந்தெடுக்கும் நடைமுறையும் ஒரே நேரத்தில் நடைபெற்று பயாளர்களுக்கான நேரத்தைக் குறைக்கும். மேலும், இந்த செயல்முறைக்கான காலமானது T4-ல் இருந்து T2-வாக குறைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, முன்னர் நான்கு நாட்களில் முடிந்த செயல்முறை இனி இரண்டே நாட்களில் முடிந்துவிடுமாம். இந்த புதிய விதிமுறைகளை ஓய்வூதியத் திட்டங்களின் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA-வே கொண்டு வந்திருக்கிறது. புதிய விதிமுறைகளானது கடந்த ஏப்ரல்-1 முதலே அமலுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.