Co-Op Bazaar: கூட்டுறவு தயாரிப்புகளை சந்தைப்படுத்த புதிய செயலி அறிமுகம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநில கூட்டுறவுத்துறை நிறுவனங்களின் அனைத்து தயாரிப்புகளையும் விற்பனை செய்ய வேண்டும் என்னும் நோக்கில், அதனை சந்தைப்படுத்த "Co-Op-Bazaar" என்னும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி இந்த செயலியினை,சென்னையில் அமைச்சர் பெரியகருப்பன் துவங்கி வைத்துள்ளார்.
இந்த செயலி மூலம், கூட்டுறவு துறை தயாரிக்கும் 64 வகை பொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த செயலியினை அறிமுகப்படுத்திய அமைச்சர் பெரியகருப்பன், செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது அவர், "தக்காளியின் விலை உயர்வு என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ளது. மக்கள் நலன் கருதி தமிழக முதல் அமைச்சர் குறைந்த விலையில் தக்காளி விற்பனைக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்" என்று தெரிவித்தார்.
தக்காளி
குறைந்த விலையில் தக்காளி விற்பனைக்கு முயற்சி
தொடர்ந்து பேசிய அவர், "தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு, தமிழக மக்கள் மத்தியில் மட்டுமின்றி, பிற மாநிலங்களும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்" என்று கூறியுள்ளார்.
மேலும், தக்காளி விற்பனை, குறிப்பிட்ட ரேஷன் கடைகளில் சோதனை முயற்சியாக சில இடங்களில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புது முயற்சி மக்களுக்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதை ஆய்வு செய்தும், மக்கள் இந்த முயற்சிக்கு அளிக்கும் வரவேற்பினை பொறுத்தும் தான், தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
ரேஷன் கடைகளில் மட்டுமின்றி, பண்ணை பசுமை அங்காடிகளிலும், தக்காளி குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.