NEET UG 2026: விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மார்ச் 11 வரை நீட்டிப்பு; என்டிஏ அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் (MBBS) மற்றும் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான இளங்கலை நீட் (NEET UG) 2026 தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நீட்டித்துள்ளது. மாணவர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் கல்வி அமைச்சரின் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி மார்ச் 8 லிருந்து மார்ச் 11, 2026 ஆக மாற்றப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்கள் இங்கே:-
விவரங்கள்
முக்கிய தேதிகள் மற்றும் நேரங்கள்
திருத்தப்பட்ட கால அட்டவணையின்படி மாணவர்கள் கவனிக்க வேண்டியவை: விண்ணப்பிக்க கடைசித் தேதி: மார்ச் 11, 2026 (இரவு 9:00 மணி வரை). கட்டணம் செலுத்த கடைசி நேரம்: மார்ச் 11, 2026 (இரவு 11:50 மணி வரை). இணையதளம்: ஆர்வமுள்ள மாணவர்கள் neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு மேல் காலநீட்டிப்பு வழங்கப்படாது.
காஷ்மீர்
காஷ்மீர் மாணவர்களுக்காக எடுக்கப்பட்ட முடிவு
ஜம்மு காஷ்மீரில் நிலவும் இணைய வேகக் குறைபாடு (2G வேகம்) காரணமாக, மாணவர்கள் ஓடிபி பெறுவதிலும் படிவங்களைச் சமர்ப்பிப்பதிலும் சிக்கல்களை சந்தித்தனர். இது குறித்து அம்மாநில கல்வி அமைச்சர் சகினா இடூ விடுத்த கோரிக்கையை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏற்றுக் கொண்டு இந்த அவகாசத்தை வழங்கியுள்ளார். "எந்தவொரு மாணவருக்கும் இந்த வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.