முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தகுதி மதிப்பெண் ரத்து - இந்திய மருத்துவ கவுன்சில்
செய்தி முன்னோட்டம்
முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு தகுதி மதிப்பெண்ணை இந்திய மருத்துவ கவுன்சில் ரத்து செய்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "பிஜி மருத்துவ படிப்பிற்காக நீட் தேர்வு எழுதுவோர் ஜீரோ மதிப்பெண் எடுத்தாலும் மேற்கொண்டு எம்.டி., எம்.எஸ்., போன்ற முதுநிலை படிப்பினை மருத்துவ மாணவர்கள் தொடரலாம். அதாவது நீட் தகுதி மதிப்பெண் ஜீரோவாக குறைக்கப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
முதுநிலை மருத்துவ படிப்பிற்கான 2 கலந்தாய்வுகள் முடிவு பெற்றுள்ள நிலையில், இந்த அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
முதுநிலை மருத்துவப்படிப்பிற்கான இடங்கள் பெருமளவில் காலியாகவுள்ளதால் நீட் தேர்வு எழுதிய அனைவரையும் கலந்தாய்வில் பங்கேற்க செய்து காலியிடங்களை நிரப்ப மருத்துவ கலந்தாய்வு குழு இத்தகைய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
கலந்தாய்வு
நடக்கவுள்ள அடுத்த கலந்தாய்வில் இணையத்தில் பதிவு செய்து பங்கேற்கலாம்
முன்னதாக, மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களின் தரத்தினை உறுதி செய்யவே நீட் தேர்வு நடத்தப்படுகிறது என்று கூறிய நிலையில், தற்போது இந்த தகுதி மதிப்பெண் ரத்து அறிவிக்கப்பட்டுள்ளதை அறிந்து கல்வியாளர்கள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று தெரிகிறது.
மேலும் அவர்கள் நீட் தேர்விற்கான காரணியை மத்திய அரசு கேலிக்கூத்தாக்கி விட்டது என்றும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கிடையே இந்த அறிவிப்பு வெளியாகியதை தொடர்ந்து, அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள கலந்தாய்வில் ஏற்கனவே நீட் எழுதிய அனைவரும் இணையத்தில் பதிவு செய்து பங்கேற்கலாம்.
அதேபோல் கலந்தாய்விற்காக முன்னதாக பதிவு செய்தோர் மீண்டும் பதிவு செய்ய தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.