Loading...
மாணவர்களுக்கு இனி சிரமம் இல்லை! நீட் 2026 கலந்தாய்வில் அதிரடி மாற்றங்கள்! ஒரே நாடு ஒரே கவுன்சிலிங் கோரிக்கை
நீட் 2026 கலந்தாய்வில் அதிரடி மாற்றங்கள்

மாணவர்களுக்கு இனி சிரமம் இல்லை! நீட் 2026 கலந்தாய்வில் அதிரடி மாற்றங்கள்! ஒரே நாடு ஒரே கவுன்சிலிங் கோரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Aug 01, 2026
07:54 pm

செய்தி முன்னோட்டம்

மருத்துவக் கலந்தாய்வுக் குழு இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு முறையில் பல்வேறு முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மருத்துவ சேர்க்கை நடைமுறைகளை மேலும் வெளிப்படையாகவும், மாணவர்களுக்கு எளிதாகவும் மாற்றும் வகையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தலைமையிலான அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது. நீண்ட காலமாக மாணவர்கள் சந்தித்து வந்த கட்டணப் பிரச்சனைகள் மற்றும் 5 முதல் 6 மாதங்கள் வரை நீடிக்கும் சேர்க்கை தாமதங்கள் இனி இந்தக் கணிப்பொறி சார்ந்த ஆன்லைன் அமைப்பினால் முற்றிலும் தவிர்க்கப்படும்.

வரவேற்பு

மருத்துவ அமைப்புகள் மற்றும் தலைவர்கள் வரவேற்பு

இந்த புதிய கவுன்சிலிங் சீர்திருத்தங்களுக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் அனில் குமார் நாயக் மற்றும் ஐக்கிய மருத்துவர்கள் முன்னணியின் தலைவர் டாக்டர் லக்ஷ்யா மிட்டல் ஆகியோர் தங்களது பலத்த வரவேற்பைத் தெரிவித்துள்ளனர்.

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இடங்கள் ஒதுக்கீடு மற்றும் காலியிட விவரங்களை வெளிப்படையாக அறிவிப்பது தகுதியின் அடிப்படையில் மாணவர்கள் சேருவதை உறுதி செய்யும் என அவர்கள் பாராட்டியுள்ளனர்.

மேலும், நாடு முழுவதும் ஒரே சீரான மருத்துவ சேர்க்கையை உறுதி செய்ய ஒரே நாடு, ஒரே கவுன்சிலிங் முறையைக் கொண்டு வர வேண்டும் என்றும் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விதிகள்

எம்.சி.சி வெளியிட்டுள்ள புதிய கவுன்சிலிங் விதிகள்

புதிய நடைமுறையின்படி, கவுன்சிலிங்கில் இடம் ஒதுக்கப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளில் கல்லூரிகளை உயர்த்த விரும்பும் மாணவர்கள், இனி தாங்கள் ஒதுக்கப்பட்ட கல்லூரிக்கு நேரில் சென்று சான்றிதழ்களை சமர்ப்பிக்கவோ அல்லது சேர்க்கை நடைமுறைகளை செய்யவோ தேவையில்லை.

மேலும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை ரத்து செய்ய விரும்பும் மாணவர்கள் எம்.சி.சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகவே ஆன்லைனில் விலகிக்கொள்ளலாம்.

அதேபோல நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் என்.ஆர்.ஐ இட ஒதுக்கீடு கோரும் மாணவர்களும் தங்களது ஆவணங்களை ஆன்லைனிலேயே பதிவேற்றம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சிறப்பு வசதிகள்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு வசதிகள்

மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கான உடற்தகுதிப் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் 16ல் இருந்து 61 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், இம்மாணவர்களின் மேல்முறையீட்டு கோரிக்கைகளை விசாரிக்க சிறப்பு பல்துறை மருத்துவ வாரியமும் அமைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய தொழில்நுட்ப அடிப்படையிலான வெளிப்படையான நடவடிக்கைகள், வரும் 2026 ஆம் ஆண்டு நீட் கலந்தாய்வில் பங்கேற்கும் லட்சக்கணக்கான மருத்துவக் கல்லூரி வேட்பாளர்களுக்கு மிகப்பெரிய அளவிலான நிம்மதியையும் நேர விரயத்தையும் மிச்சப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

ADVERTISEMENT