இந்தியாவுக்குள் நுழைந்த 600 மியான்மர் வீரர்கள்: மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது மிசோரம்
மியான்மர் ராணுவ ஆட்சிக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், மியான்மர் ராணுவ வீரர்கள் 600 பேர் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். மிசோரம் அரசாங்கம் இந்த நிலைமையை மத்திய அரசிடம் தெரிவித்ததோடு, ராணுவ வீரர்களை விரைவாக திருப்பி அனுப்புமாறு கோரியுள்ளது. மேற்கு மியான்மரின் ராக்கைன் மாநிலத்தைச் சேர்ந்த ஆயுதக் குழுவான அரக்கான் இராணுவ(AA) போராளிகள் மியான்மர் இராணுவத்தின் முகாம்களை முற்றுகையிட்டதை அடுத்து, மியான்மர் துருப்புக்கள் மிசோரமின் லாங்ட்லாய் மாவட்டத்திற்குள் நுழைந்தன. ஆறு மிசோரம் மாவட்டங்கள் மியான்மருடன் 510 கிலோமீட்டர் சர்வதேச எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மியான்மரில் என்ன நடக்கிறது?
2020இல் மியான்மாரில் நடந்த தேர்தலில் ஜனநாயகப் பிரமுகர் ஆங்-சான்-சூகியின் கட்சி வெற்றி பெற்றது. அப்போது நடந்த தேர்தலில் வாக்காளர் மோசடி நடைபெற்றதாக ஆங் சான் சூகியின் மீது குற்றம் சாட்டிய ராணுவம், பிப்ரவரி 1, 2021அன்று மியான்மர் அதிகாரத்தைக் கைப்பற்றியது. இவை நிரூபிக்கப்படவில்லை என்றாலும், சூகி மற்றும் பிற உயர்மட்ட அரசியல் தலைவர்களை ராணுவம் சிறைபிடித்தது. அதனை தொடர்ந்து, மியான்மார் இராணுவத்திற்கு எதிராக மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தினர். அது பின்பு ஆயுதமேந்திய போராட்டமாக மாறியது. முக்கியமான மூன்று இன ஆயுதக் குழுக்கள் சீனாவின் எல்லைக்கு அருகாமையில் உள்ள பல இராணுவ முகாம்களையும் நகரங்களையும் கைப்பற்றியுள்ளன. அந்த ஆயுதமேந்திய போராளிகளிடம் இருந்து தப்பித்த இராணுவ வீரர்கள் தான் தற்போது இந்தியாவிற்குள் நுழைந்துள்ளனர்.