Page Loader
ஹத்ராஸ்: நெரிசல் காரணமாக 121 பேர் உயிரிழப்பு; மதபோதகர் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு 
மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்படும் உடல்கள் pc: இந்தியா டுடே

ஹத்ராஸ்: நெரிசல் காரணமாக 121 பேர் உயிரிழப்பு; மதபோதகர் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு 

எழுதியவர் Venkatalakshmi V
Jul 03, 2024
09:01 am

செய்தி முன்னோட்டம்

நேற்று ஹத்ராஸில் நடைபெற்ற ஒரு மதக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஏழு குழந்தைகள் உட்பட குறைந்தது 121 பேர் உயிரிழந்துள்ளனர். மிகவும் துயரமான சம்பவமாக கருதப்படும் இந்த உயிரழப்புகளுக்கு, பல நாடுகளின் தூதர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் பலரின் உடல்கள் ஹத்ராஸ் அரசு மருத்துவமனையின் உள்ளே பனிக்கட்டிகளின் மீது அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களின் உறவினர்கள் கதறி அழுதபடி, சடலங்களை வீட்டிற்கு எடுத்துச் செல்ல வெளியே காத்திருக்கும் காட்சிகள் பார்பவர்கள் மனதை கரைய செய்கிறது. சமய போதகர் எனக்கூறப்படும் போலே பாபாவின் ' சத்சங்கிற்காக ' சிக்கந்தராவ் பகுதியில் உள்ள புல்ராய் கிராமத்திற்கு அருகே ஆயிரக்கணக்கான மக்கள் கூடியபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து 

விபத்து எப்படி நடந்தது?

நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் கூடியிருந்த பக்தர்கள் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியின்படி, நேரில் பார்த்த ஒரு சாட்சி, ஆயிரக்கணக்கான மக்கள் அந்த இடத்தில் இருந்தனர். பாபா வெளியேறும் போது, ​​அவர்களில் பலர் அவரது பாதங்களைத் தொட விரைந்தனர். அவர்கள் திரும்பி வரும்போது, ​​அருகில் உள்ள வாய்க்காலில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், தரையின் சில பகுதிகள் சகதியாக மாறியதால், மக்கள் ஒருவர் மீது ஒருவர் தவறி விழுந்தனர். 'சத்சங்கம்' நடத்த அனுமதி கோரி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சமர்ப்பித்த விண்ணப்பத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 80,000 ஆக இருந்தது. ஆனால் சுமார் 2.5 லட்சம் பேர் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.

முதல்வர் யோகி

சம்பவ இடத்திற்கு விரையும் முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று ஹத்ராஸுக்கு வருகை தருகிறார். இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், ஆதித்யநாத் செவ்வாய்க்கிழமை, "இந்தச் சம்பவத்தின் அடிப்பகுதியை எங்கள் அரசாங்கம் கண்டுபிடித்து, சதி செய்தவர்களுக்கும், காரணமானவர்களுக்கும் உரிய தண்டனை வழங்கும். மாநில அரசு இந்த முழுச் சம்பவத்தையும் விசாரித்து வருகிறது'' என்றார். அரசாங்க அறிக்கையின்படி, சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரிக்க ஏடிஜி ஆக்ரா மற்றும் அலிகார் பிரதேச ஆணையர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இறந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

வழக்கு 

மதக்கூட்டம் நடத்திய அமைப்பாளர்கள் மீது FIR பதிவு

ஹத்ராஸ் 'சத்சங்' அமைப்பாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த புகாரில், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதாகவும், அமைப்பாளர்களின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்தும், விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் கான்ஸ்டபிளாக இருந்து பின்னர் கடந்த இரண்டு தசாப்தங்களாக மத போதகராக மாறிய சாகர் விஸ்வ ஹரி 'போலே பாபா' என்ற பாபா நாராயண் ஹரியின் 'சத்சங்கத்தில்' கூட்ட நெரிசல் ஏற்பட்டது. போலே பாபாவின் உண்மையான பெயர் சூரஜ்பால். தற்போது அவர் தலைமறைவாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவரை கைது செய்ய அவரது ஆஸ்ரமம் அமைந்துள்ள பகுதிக்கு காவல்துறையினர் விரைந்துள்ளதாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது.