
தமிழகத்தில் பைப் லைன் வழியே எரிவாயு இணைப்பு: 1.50 லட்சம் வீடுகள் பதிவு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் இயற்கை எரிவாயுவை (PNG) வீடுகளுக்கு குழாய் வழியாக வழங்கும் திட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை மாநிலம் முழுவதும் 1.49 லட்சம் வீடுகள் பதிவு செய்துள்ளன.
இதில் 12,500 வீடுகளுக்கு ஏற்கனவே எரிவாயு வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டம், குறைந்த செலவில், சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் எரிவாயு விநியோகிக்கும் முக்கியமான முயற்சியாக கருதப்படுகிறது.
தற்போது வீட்டுப் பயன்பாட்டிற்கு 14.2 கிலோ மற்றும் வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையில் LPG சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருவதுடன், PNG வழியாக எரிவாயு வழங்கும் திட்டம் மாற்று வழியாய் விரிவாக செயல்படுத்தப்படுகிறது.
இந்த இயற்கை எரிவாயு பூமிக்கடியில் இருந்து பெறப்படும் வளமாகும். இது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை என்பதுடன், எல்.பி.ஜி. சிலிண்டரை விட குறைந்த விலையிலும் கிடைக்கக்கூடியது.
விவரங்கள்
தமிழகத்தில் முதற்கட்டமாக அமல்படுத்தப்படும் திட்டம்
வீடுகளுக்கு பைப் வழியாக வழங்கும் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் துறைமுகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் நிறுவியுள்ள LNG(Liquefied Natural Gas) முனையத்தில் இருந்து இயற்கை எரிவாயு கொண்டு வரப்படுகிறது.
இந்த எரிவாயு வாகனங்களுக்கு CNG மற்றும் வீடுகளுக்கு PNG என இரு வடிவங்களிலும் வழங்கப்படுகிறது.
மாநிலம் முழுவதும் 2.30 கோடி வீடுகளுக்கு பைப் லைன் மூலம் PNG வழங்கவும், 2,625 CNG நிலையங்கள் மூலம் வாகனங்களுக்கு எரிவாயு வழங்கவும் மத்திய அரசு ஏழு நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் நாகை மாவட்டங்களில் பைப் லைன் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, வாடிக்கையாளர்கள் பதிவு செய்யப்படுகிறது.