மணிப்பூர் வன்முறை: கூடுதலாக 1,400 பாதுகாப்புப்படை வீரர்களை அனுப்பிய மத்திய அரசு
மணிப்பூரில் புதிய வன்முறை வெடித்துள்ள நிலையில், குறைந்தபட்சம் 10 மத்திய துருப்புக்களை மத்திய அரசு மணிப்பூருக்கு அனுப்பியுள்ளது. இந்த 10 மத்திய துருப்புகளில் சுமார் 1,400 பாதுகாப்புப்படை வீரர்கள் உள்ளனர். இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்றும் நாளையும் புதுடெல்லியில் வைத்து மணிப்பூரின் பழங்குடியின குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பழங்குடி தலைவர்கள் மன்றத்துடன்(ITLF) பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மணிப்பூரில் மே 3ஆம் தேதி தொடங்கி இன்று வரை நீடித்து வரும் இன மோதல்களால் இதுவரை 180 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை, மெய்தே சமூகத்தை சேர்ந்த மூவரின் உடல்கள் அவர்களது வீட்டுக்குள் கண்டெடுக்கப்பட்டன.
புதிய வன்முறைகளால் மணிப்பூரில் பதட்டநிலை
அது நடந்து சில மணிநேரங்களுக்குள், சுராசந்த்பூர் பகுதியில் குக்கி சமூகத்தை சேர்ந்த மூன்று ஆண்கள் கொல்லப்பட்டனர். இந்த புதிய வன்முறைகளால் மணிப்பூரில் பதட்டநிலை நிலவி வருகிறது. இதனையடுத்து, மத்திய ரிசர்வ் போலீஸ் படையில்(CRPF) இருந்து 5 துருப்புகள், எல்லைப் பாதுகாப்புப் படையிலிருந்து(BSF) 3 துருப்புகள், சஷாஸ்த்ரா சீமா பால் மற்றும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையிலிருந்து தலா 1 துருப்பு உட்பட பத்து மத்திய துருப்புகள் மணிப்பூருக்கு விரைந்துள்ளன. அதனால், பல்வேறு துணை ராணுவப் படைகளை சேர்ந்த 125 துருப்புகளும், இந்திய ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸை சேர்ந்த 164 குழுக்களும் தற்போது மணிப்பூரில் உள்ளன.