ஒரே பாலின திருமணங்கள்: குழந்தை உரிமைகள் ஆணையம் எதிர்ப்பு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் ஒரே பாலின தம்பதிகளுக்கு தத்தெடுக்கும் உரிமைகளை வழங்க கோரிய மனுக்களுக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்(NCPCR) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கோரி பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஒரே பாலின தம்பதிகளுக்கு தத்தெடுக்கும் உரிமைகளை வழங்க கோரிய மனுக்களும் அடங்கும்.
இந்த மனுக்களின் இறுதி வாதங்களை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நாளை(ஏப்-18) உச்சநீதிமன்றத்தில் விசாரிக்க உள்ளது.
இந்நிலையில், இதற்கு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
NCPCR உச்சநீதிமன்றத்தில் ஒரு தலையீட்டு விண்ணப்பத்தை தாக்கல் செய்யதுள்ளது.
இந்த விண்ணப்பத்தில், ஒரே பாலின தம்பதிகளால் வளர்க்கப்படும் குழந்தைகள் சமூக ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது.
details
பிரச்சனைகள் உள்ள நபர்களிடம் குழந்தைகளை கொடுக்கக்கூடாது: NCPCR
"ஒரேபாலின தம்பதிகள் தத்தெடுப்பதை அனுமதிப்பது குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும்" என்று NCPCR தெரிவித்துள்ளது.
ஒரேபாலின தம்பதிகளால் வளர்க்கப்படும் குழந்தைகள் பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கோள் காட்டிய NCPCR, இந்த கருத்தை தெரிவித்திருக்கிறது.
விண்ணப்பத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள ஆய்வு அமெரிக்காவின் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தின் டாக்டர் பால் சுலின்ஸால் நடத்தப்பட்டது.
ஒரேபாலின பெற்றோரைக் கொண்ட குழந்தைகளுக்கு, எதிர்பாலின பெற்றோரைக் கொண்ட குழந்தைகளை விட உணர்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரச்சினைகள் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளன என்று இந்த ஆய்வில் கூறப்பட்டிருக்கிறது.
"பிரச்சனைகள் உள்ள நபர்களிடம்" குழந்தைகளை கொடுப்பது, குழந்தைகளை பரிசோதனைக்கு உள்ளாக்குவதற்கு சமம் என்று NCPCR கூறியுள்ளது.
பால்புதுமையினர்(LGBTQIA+) மனநல குறைபாடுகள் உள்ளவர்கள் அல்ல என்று இந்திய மனநல சங்கம் சமீபத்தில் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.