பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான புதிய பெயரை அறிவித்தார் பிரதமர் மோடி
பழைய நாடாளுமன்ற கட்டிடம் இனி "சம்விதன் சதன்"(அரசியலமைப்பு மாளிகை) என்று அழைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் ஆற்றிய தனது கடைசி உரையில் அறிவித்துள்ளார். அடுத்தபடியக, பிரதமர் மோடியும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு நடைபயணமாக செல்வார்கள். இன்றிலிருந்தது புதிய நாடாளுமன்ற கட்டிடம் அதிகாரப்பூர்வ இந்திய நாடாளுமன்றமாகும். பழைய நாடளுமன்ற கட்டிடம் 1927இல் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கட்டிடம் கட்டி இந்த வருடத்துடன் 96 ஆண்டுகள் ஆகிறது. மக்களவையில் நேற்று பேசிய பிரதமர் மோடி, பழைய கட்டிடத்தின் ஒவ்வொரு செங்கலுக்கும் மரியாதை செலுத்தினார். மேலும், எம்.பி.க்கள் புதிய நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் புதிய கட்டிடத்திற்குள் நுழைவார்கள் என்றும் அவர் கூறினார்.
பழைய நாடாளுமன்ற கட்டிடம் இடிக்கப்படுமா?
பழைய நாடாளுமன்ற கட்டிடம், பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர்களான சர் எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டதாகும். இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்தே இந்த கட்டிடத்தில் தான் மக்களவையும் மாநிலங்களையும் இயங்கி வருகின்றன. ஆனால், இது மிகவும் பழைய கட்டிடம் என்பதால் இது இன்றைய தேவைக்கு போதுமானதாக இல்லை. ஆனால், புதிய கட்டிடத்திற்கு நாடாளுமன்றம் மாற்றப்பட்டாலும், பழைய கட்டிடம் இடிக்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பழைய கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு, நாடாளுமன்ற நிகழ்வுகளுக்கு அதிக இடம் தேவைப்படும் போது அது பயன்படுத்தப்படும் என்றும் அரசாங்கம் கூறியுள்ளது. பழைய கட்டிடத்தின் ஒரு பகுதி அருங்காட்சியகமாக மாற்றப்படலாம் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.