சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்: ஐஇடி குண்டுவெடிப்பில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் இன்று நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் தலைநகரமான ராய்ப்பூரில் இருந்து 400 கிமீ தொலைவில் உள்ள சுக்மா மாவட்டத்தில் இருக்கும் சில்கர் மற்றும் தெகல்குடெம் என்னும் பாதுகாப்புப் படையினரின் முகாம்களுக்கு இடையே திம்மாபுரம் கிராமத்திற்கு அருகே இன்று மதியம் 3 மணியளவில் IED குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. சிஆர்பிஎஃப்-ன் கமாண்டோ பட்டாலியன் ஃபார் ரெசல்யூட் ஆக்ஷன்(கோப்ரா) 201 பட்டாலியனைச் சேர்ந்த வீரர்கள், இன்று மாலை சுமார் 3 மணியளவில் டிரக் மற்றும் பைக்குகளில் சில்கரில் இருந்து தெகுலகுடம் முகாம்களுக்கு வழக்கமான ரோந்துப் பணிக்கு சென்றிருந்தனர்.
தேடுதல் பணி நடைபெற்று வருகிறது
அப்போது நடந்த IED குண்டு வெடிப்பால் அவர்கள் சென்ற டிரக் வெடித்து சிதறியது. உயிரிழந்தவர்கள் கான்ஸ்டபிள் சைலேந்திரா (29) மற்றும் வாகன ஓட்டுநர் விஷ்ணு ஆர் (35) என அடையாளம் காணப்பட்டனர். அந்த ராணுவ வீரர்களின் உடல்கள் அப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டு வருவதாகவும், தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். முன்னதாக ஏப்ரல் மாதம், சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் மூன்று பெண்கள் உட்பட 15க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.